சிங்கப்பூர்க் கடற்கரை மணலில் எண்ணெய்யை எளிதில் சிதைக்கும் நுண்ணுயிரிகள்: ஆய்வு

சிங்கப்பூர்க் கடற்கரை மணலில் எண்ணெய்யை எளிதில் சிதைக்கும் நுண்ணுயிரிகள்: ஆய்வு

2 mins read
a1b4dd51-8408-4f8f-aeb8-4b2305089469
செயின்ட் ஜான்ஸ் தீவின் பெண்டேரா பே பகுதியிலிருந்து மணல் சேகரிக்கப்படுகிறது. - படம்: ஸ்டீஃபன் பிரையன் பாய்ன்டிங்
multi-img1 of 3
Google News Preferred Icon

எண்ணெய்க் கசிவு போன்ற மனிதனால் ஏற்படுத்தப்படும் பேரிடர்க் காலங்களில் இயற்கையே மனிதனுக்கு உற்ற துணையாக இருக்க முடியும்.

அவ்வகையில், மணலில் ஈரப்பதம் குறைந்து ஆக்சிஜன் அதிகமிருக்கும் வேளையில், கடல் கரைகளில் உள்ள இயற்கையான நுண்ணுயிரிகள் எண்ணெய்க் கழிவுகளை மிக விரைவாக மக்கச் செய்வதாக அண்மைக்கால ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டீஃபன் பிரையன் பாய்ன்டிங் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் மேற்கொண்ட அந்த ஆய்வு குறித்த கட்டுரை ‘சுற்றுச்சூழலியல் மற்றும் உயிர்ச்சூழல் தொழில்நுட்பம்’ எனும் சஞ்சிகையில் ஆகஸ்ட் மாதம் வெளியானது.

நல்ல வடிகால் வசதியுடைய, உயிர்வாயு செறிந்த மணலில் 90 நாள்களில் 40 விழுக்காட்டு எண்ணெய்க் கழிவுகளை நுண்ணுயிரிகள் மட்கச் செய்தன அதே நேரத்தில், நீர் தேங்கிய, உயிர்வாயு குறைந்த மணலில் நுண்ணுயிரிகளால் ஐந்து விழுக்காட்டு எண்ணெய்க் கழிவுகளையே சிதைக்க முடிந்தது.

நுண்ணுயிரிகள் எண்ணெய்யைச் சிதைப்பதில் உயிர்வாயு முக்கியக் கூறாகத் திகழ்கிறது என்று திரு பாய்ன்டிங் குறிப்பிட்டார்.

கடந்த 2024 ஜூன் மாதத்தில் சிங்கப்பூரின் தெற்குப் பகுதியில் நிகழ்ந்த பேரழிவு எண்ணெய்க் கசிவைத் தொடர்ந்து, 2025 செப்டம்பரில் தொடங்கப்பட்ட முதற்கட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த ஆய்வு அமைந்தது.

செயின்ட் ஜான்ஸ் தீவிலுள்ள பெண்டேரா பேவிலிருந்து சேகரிக்கப்பட்ட மணலில் எண்ணெய்யைச் சிதைக்கவல்ல 298 நுண்ணுயிரி இனங்களை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

அவற்றில் ‘ஆல்ஃபா புரோட்டியோ பாக்டீரியா’ இனத்தைச் சேர்ந்த நுண்ணுயிரிகள், உயிர்வாயு செறிந்த மணலில் எண்ணெய்யை விரைவாகச் சிதைக்கின்றன.

அதேபோல, நீர் தேங்கிய, உயிர்வாயு குறைந்த மணலில் எண்ணெய்யைச் சிதைக்கும் பணியை மற்ற நுண்ணுயிரிகள் பார்த்துக்கொள்கின்றன.

கடலில் அலை மாற்றங்களால் உயிர்வாயு அளவு மாறும்போது, இரு சூழல்களுக்கும் ஏற்ப தகவமைத்துக்கொண்டு, எண்ணெய்யைச் சிதைக்கும் பணியை மேற்கொள்ளும் நுண்ணுயிரிகளும் கண்டறியப்பட்டுள்ளதாகத் திரு பாய்ன்டிங் கூறினார்.

இத்தகவல்களைக் கொண்டு, எந்தக் கடற்கரைகளில் எண்ணெய் இயற்கையாகவே விரைந்து மட்கிப்போகும் என்பதைக் கணிக்கும் மாதிரிகளை ஆய்வாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.

இதன்மூலம் கடற்கரைகளில் உள்ள மணலை காற்றோட்டப்படுத்துவது, நீர் வடிகால் வசதியை மேம்படுத்துவது போன்ற செலவுகுறைந்த வழிமுறைகளின் துணையுடன் தூய்மைப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த முடியும் என்று பேராசிரியர் பாய்ன்டிங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்