கணினிச் சில்லு உற்பத்தியை அதிகரிக்க சிங்கப்பூரில் மைக்ரான் $30.5 பில்லியன் முதலீடு

2 mins read
மைக்ரானின் புதிய ஆலையால் 1,600 வேலைகள் உருவாக்கப்படும்
6a4fe3e9-ed2a-4a19-974a-dbd6e57fef82
ஜனவரி 27ஆம் தேதி நடைபெற்ற புதிய ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் துணைப் பிரதமரும் வர்த்தக தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் (நடுவில்) கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கணினி நினைவுச் சில்லு தயாரிப்பு நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜி, செயற்கை நுண்ணறிவுக்கான (ஏஐ) தேவை அதிகரித்து வருவதால், தரவு மையங்களை இயக்கத் தேவையான வன்பொருள்களுக்கு முன்னெப்போதும் இல்லாத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அதன் பகுதி மின்கடத்திகள் உற்பத்தியை அதிகரிக்க இங்கு 24 பில்லியன் அமெரிக்க டாலர் (S$30.5 பில்லியன்) செலவில் ஓர் ஆலையைக் கட்டி வருகிறது.

உட்லண்ட்சில் உள்ள அமெரிக்க நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி வளாகத்திற்குள் அமைந்துள்ள இந்த ஆலை, 2028ஆம் ஆண்டின் பிற்பாதியில் செயல்பாட்டுக்கு வரும்போது கூடுதலாக 700,000 சதுர அடி பரப்பளவிலான ‘சுத்தமான அறை’ இடத்தை வழங்கும்.

‘சுத்தமான அறை’ என்பது காற்றில் உள்ள துகள்கள், தூசி, நுண்ணுயிரிகள், ரசாயன மாசுபாடுகள் போன்ற பிற அசுத்தங்களின் செரிவைக் குறைக்க நுட்பமாக வடிவமைக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட இடமாகும்.

இது தரவு மையங்களை ஆதரிக்கும் திட-நிலை இயக்கிகளில் பயன்படுத்தப்படும் நெண்ட் ஃபிளாஷ் (Nand flash) நினைவுச் சில்லுகளை உற்பத்தி செய்யும். இது தரவுச் சேமிப்புக் கருவிகளைவிட வேகமாகச் செயல்படும்.

மைக்ரானின் முதலீடு இந்தப் புதிய ஆலையில் 10 ஆண்டுகள் நீடிக்கும்.

புதிய ‘நெண்ட்’ வசதி பொறியியல் மற்றும் செயல்பாடுகள் துறைகள் முழுவதும் கிட்டத்தட்ட 1,600 வேலைகளை உருவாக்கும். உயர்-அலைவரிசை நினைவுச் சில்லு ஆலையுடன் சேர்ந்து ஏறக்குறைய 3,000 புதிய வேலைகள் உருவாகும்.

செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) அன்று புதிய ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டார் துணைப் பிரதமரும், வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங்.

அப்போது பேசிய அவர், “புவிசார் அரசியல் பதற்றங்கள், விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள், விரைவான தொழில்நுட்ப மாற்றம் ஆகியவை உலகளாவிய நிறுவனங்கள் முதலீடு, உற்பத்தி, புத்தாக்கம், சிக்கலான விநியோகச் சங்கிலிகளில் ஆபத்தை நிர்வகித்தல் ஆகியவற்றை எவ்வாறு அணுகுகின்றன என்பதை மறுவடிவமைத்துள்ளன,” என்றார்.

“சிங்கப்பூர் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் இடம் இதுதான். உலகளவில் நிலைமைகள் நிலையற்றதாக இருந்தாலும், உலகளவில் முன்னணி நிறுவனங்கள் முக்கியமான செயல்பாடுகளை நங்கூரமிடக்கூடிய நம்பகமான மையமாகச் சிங்கப்பூர் இருக்க இலக்கு வைத்துள்ளோம்,” என்று திரு கான் கூறினார்.

“இந்தப் புதிய பகுதி மின்கடத்தி உற்பத்தி ஆலையில் மைக்ரானின் முதலீடு, அதன் அளவின் காரணமாக மட்டுமல்ல, மேம்பட்ட நெண்ட் ஃபிளாஷ் நினைவுச் சில்லு உற்பத்தியில் சிங்கப்பூரின் பங்கை உறுதிப்படுத்துவதாலும் முக்கியத்துவம் பெறுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

சிங்கப்பூர் பகுதி மின்கடத்தி தொழிலுக்கு ‘ஏஐ’ ஒரு நீடித்த, சக்திவாய்ந்த வளர்ச்சி இயக்கி என்று திரு கான் கூறினார். அதே நேரத்தில் நெண்ட் ஆலை நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்