தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆய்வு: நீர்வாழ் விலங்குகளுக்குள் நுண்ணெகிழிகள்

2 mins read
31d95b47-8f1e-4af2-b324-8ed39084e481
சிங்கப்பூரின் கடலோரக் குடியிருப்புகளிலும் நுண்ணெகிழிகள் படர்ந்திருப்பதாகவும் ஒரு விலங்கிலிருந்து மற்றொரு விலங்கிற்கு நெகிழித் துகள்கள் கடத்தப்படக்கூடும் என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது. - படம்: சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம்

சிங்கப்பூரின் பவளப்பாறைகள், அலையாத்திக் காடுகள் (mangroves), கடற்புற்கள் ஆகியவற்றில் வசிக்கும் நீர்வாழ் விலங்குகளுக்குள் நுண்ணெகிழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அண்மை ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

இந்த நெகிழித் துகள்கள், விலங்குகளின் குடல் குழாய்களில் மட்டுமின்றி அவற்றின் சுவாச உறுப்புகளிலும் உடற்திரவங்களிலும் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த விலங்குகள் உட்கொள்ளும் உணவு வழியாக மட்டுமில்லாமல் அவை மூச்சு உள்வாங்கும்போதும் நீர்நிலையில் நகரும்போதும் நெகிழித் துகள்கள் அவற்றின் உடல்களுக்குள் புகுந்துவிடுவதாகச் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வெப்பமண்டல கடல்சார் அறிவியல் கழகத்தை (Tropical Marine Science Institute) சேர்ந்த அந்த ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிங்கப்பூரின் கடலோரக் குடியிருப்புகளிலும் நுண்ணெகிழிகள் படர்ந்திருப்பதாகவும் ஒரு விலங்கிலிருந்து மற்றொரு விலங்கிற்கு நெகிழித் துகள்கள் கடத்தப்படக்கூடும் என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது.

5 மில்லி மீட்டருக்கும் குறுகிய மிகச் சிறிய நெகிழித் துகள்கள் த நுண்ணெகிழிகள் என அழைக்கப்படுகின்றன. சிங்கப்பூரின் கடற்கரைப் பகுதியிலுள்ள 97 விழுக்காடு நெகிழிகள், கடற்துறை சார்ந்த இடங்களிலிருந்து வந்திருப்பதாக அண்மையில் வெளிவந்த முன்னைய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

இதன் தொடர்ச்சியாக, நுண்ணெகிழிகள் எங்கு உள்ளன, எங்குப் பரவியுள்ளன, உள்ளூர் கடல்வாழ் உயிரினங்களுக்குள் எவ்வளவுத் துகல்கள் உள்ளன என்பது குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய விரும்பினர்.

கடலோரச் சூற்றுச்சூழலில் நெகிழிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் தீங்குகளையும் ஆராயும் பெரும் திட்டத்தில் இந்த ஆய்வு அங்கம் வகிக்கிறது.

வளர்ந்துவரும் ஆய்வுத்தலைப்பாகத் திகழ்கிற நுண்ணெகிழிகளைப் பற்றியும் அவற்றின் பாதிப்பு குறித்த விவரங்கள் அவ்வளவாக அறியப்படவில்லை என்று அமெரிக்காவின் தேசிய பெருங்கடல், காற்றுமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration) தெரிவித்தது.

இத்தகைய நுண்ணெகிழிகளால் விலங்குகளின் இயல்பான வளர்ச்சி, இனப்பெருக்க ஆற்றல், நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவை பாதிப்படையக்கூடும் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கு ‘ஆரஞ்சு ஃபிட்லர்’ நண்டு, ‘போர்சிலெய்ன் ஃபிட்லர்’ நண்டு, ‘கார்லிக் பிரெட் சீ கியூகம்பர்’, ‘சைனெப்டிட் சீ கியூகம்பர்’ ஆகிய நான்கு நீர்வாழ் உயிரினங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இந்த நான்கு இனங்களைச் சேர்ந்த 153 விலங்குகள் நவம்பர் 2021க்கும் மே 2022க்கும் இடையே சேகரிக்கப்பட்டன. பாசிர் ரிஸ் பூங்கா, செயிண்ட் ஜான்ஸ் தீவு, கூசு தீவு, ஸ்மால் சிஸ்டர்ஸ் தீவு, சாங்கி கடற்கரை, புலாவ் ஹந்து பெசார் ஆகிய இடங்களிலிருந்து இவை திரட்டப்பட்டன.

விலங்குகளின் உறுப்புகளில் மொத்தம் 1,266 நுண்ணெகிழித் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்தக் குழு தனது ஆய்வில் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்