மைக்ரோசாஃப்ட், கிரிப்டோ கணக்குகளைப் பயன்படுத்தி இரு மாதங்களில் $1 மி. மோசடி

மைக்ரோசாஃப்ட், கிரிப்டோ கணக்குகளைப் பயன்படுத்தி இரு மாதங்களில் $1 மி. மோசடி

2 mins read
a1d7daa3-e7e3-4221-b6c7-e9750ea19cdb
மே மாதம் முதல் இதுவரை குறைந்தபட்சம் 30 மோசடிப் புகார்கள் தங்களுக்கு வந்திருப்பதாகக் காவல்துறை கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மைக்ரோசாஃப்ட் அல்லது கிரிப்டோ.காம் போன்ற கணக்குகளில் முறைகேடு நடந்திருப்பதாக வாடிக்கையாளர்களைப் பயமுறுத்தி சிங்கப்பூரில் கடந்த மே மாதம் முதல் குறைந்தபட்சம் $1 மில்லியன் பணம் பறிக்கப்பட்டுள்ளது.

தங்களை அந்த நிறுவனங்களின் ஊழியர்கள் அல்லது காவல்துறையினர் என்று சொல்லிக்கொண்டு வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு முறைகேட்டிலிருந்து பணத்தைக் காப்பாற்ற வழிசொல்வதாகக் கூறி மோசடியை அரங்கேற்றிவிடுவதாகக் காவல்துறை வியாழக்கிழமை (ஜூலை 2) வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

அதுபோன்ற மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக மே மாதம் முதல் குறைந்தபட்சம் 30 புகார்கள் தங்களுக்கு வந்திருப்பதாக அந்த அறிக்கையில் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

‘மைக்ரோசாஃப்ட்’ கணக்கு வைத்திருப்போரின் சாதனங்கள் ஊடுருவப்பட்டதாக அவர்களின் கணினியில் ‘பாப்-அப்’ வாயிலாக ‘மைக்ரோசாஃப்ட்’ தகவல்போலத் தோன்றும் ஓர் எச்சரிக்கை வரும்.

அதனால் பீதியடைந்த அவர்களுக்கு, 3ல் தொடங்கும் ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்து அதனை உடடினயாகத் தொடர்புகொள்ளுமாறு கூறப்படும்.

அந்த இணைப்பில் தொழில்நுட்ப உதவி அதிகாரி என்று சொல்லிக்கொண்டு ஒருவர் வருவார். பின்னர் அவர் அந்த அழைப்பை காவல்துறை அதிகாரி குறிப்பிடும் ஒருவருக்கு மாற்றிவிடுவார்.

கணினியை சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தியதாகவும் கணினி பழுதடைந்துவிட்டதாகவும் அந்தக் காவல்துறை அதிகாரி கூறி அச்சத்தை ஏற்படுத்துவார்.

அதற்குத் தீர்வாக, கணினி வாயிலாக ஓர் இணைப்பைக் கொடுத்து அதனை ‘கிளிக்’ செய்யுமாறு அந்த அதிகாரி கூறுவார். அவ்வாறு செய்ததும் பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுவிடும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சில வேளைகளில், இணையம் அல்லது வங்கி வாயிலாக பணப் பரிமாற்றம் செய்யுமாறு ஒரு வங்கிக் கணக்கை ‘காவல்துறை’ பெயரில் இயங்கும் மோசடிக்காரர்கள் கொடுப்பார்கள்.

கிரிப்டோ வாடிக்கையாளர்களுக்கு கிரிப்டோ அதிகாரி என்று கூறிக்கொண்டு ஓர் அழைப்பு வரும். அவர்களின் கணக்கை துருக்கி போன்ற வெளிநாடுகளில் இருப்போர் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி, பயமுறுத்தி பணத்தைப் பறித்துவிடுவர்.

பரிமாற்றம் செய்யப்பட்ட ‘கிரிப்டோகரன்சி’ சொத்துகளை மீட்பது மிகவும் சவாலானது என்றும் காவல்துறை அத்தகைய பரிவர்த்தனைகளைத் திரும்பப் பெற முடியாது எனவும் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தங்களுக்கு வரும் எச்சரிக்கைகளின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க அதிகாரபூர்வ வழிகளை நாடவேண்டும் என்று கூறிய காவல்துறை, ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் தனது பிழை அல்லது எச்சரிக்கைச் செய்திகளில் தொலைபேசி எண்களைச் சேர்ப்பதில்லை என்று குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
காவல்துறைமோசடிபுகார்