மத்தியக் கிழக்கில் நிலவிவரும் பூசல் நீடித்தால் எரிசக்தி, மின்சாரக் கட்டணங்கள் கூடும் என்று தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கா சண்முகம் கூறியுள்ளார்.
மத்தியக் கிழக்குப் போரால் சிங்கப்பூரில் ஏற்படும் தாக்கம் குறித்து ஏப்ரல் 7ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் சண்முகம், எண்ணெய், எரிசக்தி, மின்சாரம் ஆகிய அம்சங்கள் குறித்து விளக்கினார்.
முக்கிய எரிசக்தி நிறுவனங்கள் சிங்கப்பூரில் பல்லாண்டுகளாகச் செயல்படுவது, எண்ணெய், எரிசக்தி மீள்திறன்களுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்றும் இதுவரை கச்சா எண்ணெய் கிடைப்பதில் தடையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எரிசக்தித் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுவரும் நிலையில், மத்திய கிழக்குப் பூசல் எவ்வளவு காலம் நீளும் எனத் தெரியாததால் அதற்கேற்ப நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மாற்றுவழிகளிலும் எண்ணெய் கிடைப்பதாகவும், ஆனால், அதற்குக் கூடுதல் விலை கொடுக்கவேண்டி இருப்பதாகவும் உள்துறை அமைச்சருமான திரு சண்முகம் சொன்னார்.
‘பிரென்ட்’ கச்சா எண்ணெய் விலை பூசல் காலத்தில் 70 விழுக்காடு வரை உயர்ந்ததையும், எரிவாயு விலையேற்றத்தைச் சிங்கப்பூரர்கள் எதிர்கொண்டுவருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பூசல்கள் முடிவடைந்தாலும் தொடர்ந்து விலையேற்றம் இருக்கும் என்றார் அமைச்சர்.
உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தடைகளால் சிங்கப்பூர்ப் பொருளியலிலும், அத்தியாவசியத் தேவைகளிலும் சிக்கல் ஏற்படுவது கவலையளிப்பதாகவும், அதுகுறித்து வர்த்தக, தொழில்துறை அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
மின்சாரத் தேவை
மேலும், மின்சார விநியோகத்தில் தடை ஏற்படாமல் இருக்க தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை அமைச்சர் சண்முகம் சுட்டினார்.
சிங்கப்பூரின் மின்சாரத் தேவை, பல வகைகளிலும் பூர்த்தி செய்யப்படுகிறது. 95 விழுக்காட்டு மின்சாரம் இயற்கை எரிவாயுவிலிருந்து பெறப்படுவதாகவும், அது டீசலாக மாற்றப்படும் வழி இருப்பதாகவும் குறிப்பிட்ட திரு சண்முகம், அதற்கேற்ற எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் சொன்னார்.
கையிருப்பைக் கூட்டும் திட்டமும் இருப்பதாகக் கூறிய அவர், “அது விலை அதிகமாக இருந்தாலும் தேவையானது,” என்றார்.
கடந்த 2023ஆம் ஆண்டிலேயே எரிசக்திச் சந்தை ஆணையம், மின்சார விற்பனை சார்ந்த ஒழுங்குமுறைகளை வலுப்படுத்தியதை உரையில் சுட்டிய அமைச்சர், இது எரிவாயு விலையை சீராகக் கையாள்வதை உறுதிசெய்யும் என்றார்.
நெருக்கடிகாலத்துக்கு முன்பே உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது, தற்போதுள்ள நிலையான சூழலுக்கு வழிவகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
எரிசக்திப் பாதுகாப்பு
பல நாடுகள் சிங்கப்பூருக்குக் கச்சா எண்ணெய்யை விநியோகிப்பதும், சிங்கப்பூர் அவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட பொருள்களை விநியோகிப்பதும் இருதரப்புச் சார்பை உருவாக்கியுள்ளதை அமைச்சர் சுட்டினார். இது தொடர் கச்சா எண்ணெய் வரத்துக்கு வழிவகுப்பதாகவும் அவர் சொன்னார்.
“மேம்பட்ட அணுவாற்றல் தொழில்நுட்பம் பாதுகாப்பான, நிலையான எரிசக்தியை வழங்கும் திறன்கொண்டது. அது கவனமாக ஆராயப்பட்டு செயல்படுத்தப்படவேண்டிய ஒன்றாகும்,” என்றும் சொன்னார் அமைச்சர் சண்முகம்.
அரசாங்கத்தில் அதற்கென உள்ள சிறப்புக் குழுக்கள் அதனைக் கவனமாக ஆராயும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

