மத்திய கிழக்குப் பதற்றம்: பயணத் திட்டங்களை மாற்றும் சிங்கப்பூரர்கள்

மத்திய கிழக்குப் பதற்றம்: பயணத் திட்டங்களை மாற்றும் சிங்கப்பூரர்கள்

2 mins read
49735444-a9ae-45ba-b048-938a7185229b
தொலைதூர இடங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக, தங்கள் வட்டாரங்களுக்கு அருகிலுள்ள இடங்களைச் சுற்றுப்பயணிகள் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளதாகப் பயண வல்லுநர்கள் கூறுகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஈரான், அமெரிக்கா இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது. இதனால், உலகளாவிய பயணத்துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விமானக் கட்டண உயர்வு, நீண்ட பயண தூரம் ஆகியவை விடுமுறைக் காலங்களில் மக்கள் மேற்கொள்ளும் பயணத்திற்கான திட்டங்களில் மாற்றம் ஏற்படக் காரணமாக உள்ளன.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை, இந்த மோதலானது மத்திய கிழக்கு வான்வெளி வழியாகச் செல்லும் பயணங்களுக்கு ஒரு புதிய நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

போர் தொடங்கிய நாளான பிப்ரவரி 28ஆம் தேதியிலிருந்து மார்ச் 13ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, 52,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து தரவு நிறுவனமான சீரியம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான இடங்களுக்குப் பயணிக்க சுற்றுப்பயணிகள் விருப்பம்

தொலைதூர இடங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக, தங்கள் வட்டாரங்களுக்கு அருகிலுள்ள இடங்களைச் சுற்றுப்பயணிகள் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளதாகப் பயண வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பிப்ரவரிக்கும் மார்ச் மாதத் தொடக்கத்திற்கும் இடையிலான காலத்தில், ஆசியாவிற்கான புதிய முன்பதிவுகள் அதன் உலகளாவிய வாடிக்கையாளர்களிடையே 35 விழுக்காடு அதிகரித்துள்ளதாகப் பயண முகவரான ‘லைட்ஃபூட் டிராவல்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோசமடைந்துவரும் புவிசார் அரசியல் சூழலுக்கு மத்தியில், சில பயணிகள் தங்களுக்கு நெருக்கமான, பாதுகாப்பான வட்டாரத்தில் உள்ள பகுதிகளுக்குச் செல்ல விரும்புவதே இதற்குக் காரணம்.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை மார்ச் முதல், இரண்டாம் வாரங்களுக்கு இடையில் பயணங்களுக்கான முன்பதிவுகள் 25 விழுக்காடு குறைந்தாலும், அதுகுறித்த விசாரணைகள் வலுவாகவே உள்ளன.

இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.5 விழுக்காடு மட்டுமே குறைந்துள்ளது.

ஜப்பான், சீனா, இந்தோனீசியா, தாய்லாந்து ஆகியவை சிங்கப்பூர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் சுற்றுப்பயண இடங்களாகும்.

தற்போது, அவர்கள் அதிகம் தேடும் முதன்மையான வட்டார இடங்களாக தோக்கியோ, பேங்காக், சியோல், பாலி, கோலாலம்பூர் போன்றவை உள்ளன எனப் பயணத் தேடல் தளமாக இருக்கும் ஸ்கைஸ்கேனர் தரவுகள் தெரிவிக்கின்றன.

சுற்றுப்பயணிகள் தங்கள் திட்டங்களை மாற்றியமைத்துக்கொண்டாலும், போரின் நேரடித் தாக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அல்லது பணிபுரிபவர்கள்தான் பெரிதும் எதிர்கொள்கின்றனர் என இன்டர்நேஷனல் எஸ்ஓஎஸ் நிறுவனத்தின் வட்டாரத் தற்காப்பு இயக்குநர் பால செல்வம் கூறினார்.

சுற்றுப் பயணத்திற்காக நாடு கடந்து செல்வோர்க்குத் தாங்கள் செல்லும் இடத்தைத் தெரிவு செய்யும் உரிமை உள்ளதாக அவர் தெரிவித்தார்.

“துபாய் அல்லது தோஹா வழியாகப் பயணிக்க வேண்டாம் என ஒருவர் முடிவு செய்தால், அவர் எளிதாக வேறு இடத்திற்குப் பயணிக்க முடியும்.

“வட்டாரத்தில் பிரபலமாக இருக்கும் கடற்கரை சார்ந்த இடத்திற்கோ அல்லது உள்நாட்டிலுள்ள வேறு இடத்தைச் சுற்றிப் பார்க்கவோ அவருக்கு வாய்ப்பு உள்ளது,” எனச் சுற்றுப்பயணிகளுக்கு இருக்கும் விருப்பத் தெரிவுகளை அவர் விவரித்தார்.

அதற்கு நேர்மாறாக, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வர்த்தகத்திற்காகச் செல்வோர்க்கும் அங்கு வசிக்கும் வெளிநாட்டினருக்கும் மிகவும் குறைவான தெரிவுகளே உள்ளன.

அவர்களில் சிலர் விமானப் போக்குவரத்து ரத்து, பணி இடமாற்றங்கள் குறித்த நிச்சயமற்ற நிலை, தங்கள் குடும்பங்களை வேறு இடத்திற்கு மாற்றுவது போன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்