மத்திய கிழக்குப் போர்: மின்சாரக் கட்டணங்கள் உயரலாம்

மத்திய கிழக்குப் போர்: மின்சாரக் கட்டணங்கள் உயரலாம்

2 mins read
மத்திய கிழக்குப் போர், அண்மைய எரிபொருள் விநியோகத்தைப் பாதித்துள்ளன: எரிசக்தி சந்தை ஆணையம்
a1ddbb78-b6d6-4cc4-b303-000bfec77f17
சிங்கப்பூர் எரிசக்தி சந்தை ஆணையத்தின் தலைமை நிர்வாகி புவா கொக் கியோங். - படம்: எஸ்பிஹெச் ஊடகம்

மத்திய கிழக்கில் நிகழும் போரால் சிங்கப்பூரின் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கலாம் என்று எரிசக்தி சந்தை ஆணையம் (EMA) புதன்கிழமை (மார்ச் 4) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் மின்சாரத்தில் கிட்டத்தட்ட 95 விழுக்காடு இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை எரிவாயுவில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 57 விழுக்காடு திரவ இயற்கை எரிவாயு (LNG) மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதியாகிறது.

எனினும், சிங்கப்பூர் மக்கள், நிலையான கட்டண ஒப்பந்தம் அல்லது சிங்கப்பூர் பவர் (எஸ்பி) குழுமம் மற்றும் சில்லறை வணிகர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டணத் திட்டத்தைப் பயன்படுத்துகின்றனர். எனவே உடனடிக் கட்டண உயர்வு பாதிப்பில் இருந்து அவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்று ஆணையம் குறிப்பிட்டது.

இருப்பினும், எரிபொருள் செலவு தொடர்ந்து அதிகரித்தால், ஒப்பந்தப் புதுப்பிப்பின்போது சிங்கப்பூரில் மின்சாரத்தைப் பயன்படுத்துவோர், அதற்கான கட்டண உயர்வை எதிர்நோக்கலாம் என்று அது கூறியது.

எரிபொருள் செலவு உயர்ந்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டணத் திட்டத்தில் உள்ள குடும்பங்களுக்கு, அடுத்தடுத்த காலாண்டுகளில் கட்டணம் உயரக்கூடும். ஒவ்வொரு காலாண்டிலும் முந்தைய காலாண்டின் சராசரி எரிபொருள் செலவின் அடிப்படையில் கட்டணம் சரிசெய்யப்படுகின்றது.

கத்தார் தனது திரவ இயற்கை எரிவாயு வசதிகளை மூடியது, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை “முழுமையாக கட்டுப்படுத்துவதாக” அறிவித்தது போன்ற நிகழ்வுகள் அண்மைய எரிபொருள் விநியோகத்தைப் பாதித்துள்ளன.

ஆணையம் உலகளாவிய நிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், எரிபொருள், மின்சார விநியோகத்தைப் பாதுகாப்பதற்காகத் தற்கால இயற்கை எரிவாயு வசதி மற்றும் தற்காலிக விலை வரம்பு செயல்முறை (Temporary Price Cap Mechanism) போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்