இந்தியாவைச் சார்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மே 20ஆம் தேதி காலை உயரத்திலிருந்து விழுந்து இறந்ததாக ஷின் மின் அன்றாடச் செய்தி தெரிவித்துள்ளது.
அன்று காலை 7 மணிக்கு அச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
பூன் லே அவென்யு, புளோக் 186ன் கீழ்த்தளத்தில் 50 வயது ஆடவர் ஒருவர் அசைவின்றிக் கிடந்ததாகவும் அந்த இடத்திலேயே அவர் மாண்டதாகவும் அது கூறியது.
இறந்தவர் சிங்கப்பூரில் கனரக வாகன ஓட்டுநராகப் பணியாற்றியவர் என்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மகனும் மகளும் அவருக்கு உண்டு என்றும் அவருடைய சக ஊழியர் ஒருவர் ஷின் மின் செய்தியாளரிடம் கூறினார்.
செய்தியாளர் அங்குச் சென்றபோது, இறந்தவரின் உடல் இரு கார்களுக்கிடையே ரத்த வெள்ளத்தில் கிடந்தது.
19வது மாடியிலிருந்து அவர் விழுந்ததாகவும் முதலில் 17வது மாடியில் ஒரு சன்னலிலும் 16வது மாடியில் ஒரு துணி காயவைக்கும் கம்பியிலும் மோதி மரத்தில் விழுந்து பின்பு கார்மீது விழுந்து இறந்ததாகக் குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.