கொட்டும் மழையில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் சாலை நடுவே தமது மதிய உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த காட்சி குறித்து இணையத்தில் சிங்கப்பூரர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
படத்தை ‘ஸ்டோம்ப்’ செய்தித் தளத்தில் பகிர்ந்த மாது ஒருவர், “இது பார்ப்பதற்கு மனிதாபிமானமற்றதாக இருக்கிறது,” என்றார்.
செம்பவாங் வீவக பகுதியில் கேன்பரா ரோட்டிலுள்ள புளோக் 106A அருகே ஜூன் 1ஆம் தேதியன்று பிற்பகல் 2 மணிவாக்கில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக இணையவாசி அன்னா பதிவிட்டிருந்தார்.
சம்மணம் போட்டபடி ஆடவர் ஒரு பெரிய அட்டைப்பெட்டி மீது உட்கார்ந்திருந்ததுபோல் படத்தில் தெரிந்தது.
நிறுத்திவைக்கப்பட்ட வேன் ஒன்றின் பின்னால் அந்த ஆடவர் உட்கார்ந்தபடி தமது மதிய உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
புளோக் கீழே உள்ள வெற்றிடத்தில் உணவைச் சாப்பிடுமாறு திருவாட்டி அன்னா அந்த ஆடவரிடம் கூறியும் வேண்டாம் என்று அவர் கூறிவிட்டார்.
போக்குவரத்து கேமரா இருப்பதால் தாம் அங்குதான் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று தமக்கு உத்தரவிடப்பட்டதாக ஆடவர் விளக்கமும் அளித்திருந்தார்.
“கேமராவுக்கு அவர் பயந்ததுபோல் தெரிந்தது. பார்ப்பதற்கு எனக்கு மனிதாபிமானம் அற்றதாக இருந்தது. மழை வேறு பெய்து கொண்டிருந்தது,” என்றார் அன்னா.
இதற்கிடையே, பேருந்து நிறுத்தம் அருகே, கழிவறைகள், கட்டடங்கள் ஓரத்தில், புல்வெளியில், புதர்களில், துர்நாற்றம் வீசும் கால்வாய்கள் அருகே எனப் பல இடங்களில் ஊழியர்கள் இவ்வாறு உட்கார்ந்து சாப்பிடுவதைத் தாங்கள் பார்த்திருப்பதாக பலரும் ஸ்டோம்ப் தளத்தில் பதிவிட்டனர்.