வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச் செல்வதற்குத் தடைவிதிக்க வலியுறுத்து

2 mins read
078509e4-2ce0-4844-ab80-eb4e602a6144
வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச் செல்வதற்குத் தடைவிதிக்கும்படி அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள ‘ஹோம்’, அதற்கான பரிந்துரைகளையும் முன்மொழிந்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச் செல்வதற்குத் தடைவிதிக்கக் கோரி, வெளிநாட்டு ஊழியர் உரிமைக் குழுவான ‘ஹோம்’ அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

அக்குழு புதன்கிழமை (மார்ச் 19) வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச் செல்லும் நடைமுறையிலிருந்து விலக நிறுவனங்களுக்கு உதவ, 12 மாதப் போக்குவரத்து மானியம் ஒன்றை வழங்குமாறு அரசாங்கத்திடம் அறைகூவல் விடுத்துள்ளது. ஹோம் குழு முன்மொழிந்துள்ள தடைக்காலத்தின் தொடக்கத்தில் நடப்புக்கு வரவேண்டிய இந்த மானியம், காலப்போக்கில் குறைய வேண்டும் என அது பரிந்துரைத்தது.

ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச் செல்ல தடைவிதிக்கப்படுவதற்கு முன்னதாக, சொந்த விருப்பத்தின் அடிப்படையில் பேருந்துகளுக்கு மாறும் நிறுவனங்கள், இந்த மானியத்தை உடனடியாகப் பெறத் தொடங்கலாம் என ஹோம் பரிந்துரைத்தது. அத்துடன், அத்தகைய நிறுவனங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் மானியமும் கொடுக்கப்பட வேண்டும் என்றது அக்குழு.

ஒட்டுமொத்த தடையை நோக்கி கட்டங்கட்டமான அணுகுமுறைக்கு அரசாங்கம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் உள்ளிட்ட இதர பரிந்துரைகளும் ஹோம் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றன.

பேருந்துகள், பேருந்து ஓட்டுநர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்கான யோசனைகளையும் அறிக்கை முன்வைத்தது. ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச் செல்லும் நடைமுறையில், ஏற்கெனவே நடப்பில் உள்ள பாதுகாப்பு விதிமுறைகளின் அமலாக்கத்தை மேம்படுத்தும்படியும் அரசாங்கத்திடம் ஹோம் வலியுறுத்தியது.

ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச் செல்லும் நடைமுறை ‘இயல்பிலேயே பாதுகாப்பற்றது’ எனக் குறிப்பிட்ட ஹோம், மாற்றங்களுக்கு தங்களை சரிப்படுத்திக்கொள்வதில் நிறுவனங்களுக்கு அவகாசம் வழங்க, இரு கட்டங்களாக தடை நடப்புக்கு வரலாம் என முன்மொழிந்தது. பெரிய நிறுவனங்களுக்கு 18 மாதங்களும் சிறிய வர்த்தகங்களுக்கு 36 மாதங்களும் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என அது கூறியது.

அத்தகைய தடைக்குத் தடைக்கல்லாக நிற்கும் மற்ற அம்சங்களையும் சரிசெய்ய அரசாங்கத்திற்கு இதன்மூலம் அவகாசம் கிடைக்கும் என்றது ஹோம்.

பாதுகாப்பான போக்குவரத்து முறைக்கு மாறுவதால் நிறுவனங்களுக்குச் செலவுகள் அதிகரிக்கலாம் என்பதை ஹோம் ஏற்றுக்கொண்டது. ஆனாலும், “அடிப்படையிலேயே பாதுகாப்பற்ற போக்குவரத்து முறையைத் தொடர்வதற்கு, செலவுகளைக் கொண்டு நியாயப்படுத்த முடியாது,” என்று அக்குழு எடுத்துரைத்தது.

குறிப்புச் சொற்கள்