சிங்கப்பூரில் ‘ஒர்க் பெர்மிட்’ மற்றும் ‘எஸ் பாஸி’ல் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வேலை செய்கின்றனர்.
சிங்கப்பூரின் உள்கட்டமைப்பு கட்டுமானத்திலும் அவற்றைப் பராமரிப்பதிலும் அந்த ஊழியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மேலும், குடும்பங்கள், முதியோர், உடல்நலம் இல்லாதோர் போன்றோரிடம் பரிவு காட்டுவதிலும் அவர்கள் தயங்குவதில்லை.
அண்மையில், புதைகுழியில் விழுந்த பெண்ணை ஏழு வெளிநாட்டு ஊழியர்கள் மீட்டது அதற்கு ஓர் உதாரணம்.
தங்களது சொந்த வீட்டிலிருந்து புறப்பட்டு வந்து பல ஆண்டுகள் இங்கு வாழும் வெளிநாட்டினர் சிங்கப்பூரைத் தங்களது இரண்டாவது வீடாகக் கருதுகின்றனர்.
அத்தகைய வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
பங்ளாதேஷ் ஊழியர்
அவர்களில் ஒருவரான ரேஹான் முஹம்மது அபு என்னும் பங்ளாதேஷ் ஊழியர், ஜுவல் சாங்கி விமான நிலையக் கட்டுமானத்தில் ஊழியராக வேலை செய்தவர். 2017ஆம் ஆண்டு, ஐந்து மாடித் தோட்டங்களை உள்ளடக்கிய அந்த விமான நிலையக் கட்டுமானத் திட்ட வரைபடத்தைப் பார்த்ததும் தமது கண்ணை தம்மால் நம்பமுடியவில்லை அந்த அளவுக்கு அற்புதமான வடிவமைப்பாக இருந்தது என்றார் அவர்.
அதன் கட்டுமானத்தில் மின்சாரச் சேவை ஊழியராக வேலை செய்த ரேஹான், 2019ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து ஜுவல் சாங்கி விமான நிலையம் திறக்கப்பட்டபோது ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டதாகவும் இன்றுவரை அந்த அற்பதுமான உணர்வு தமது மனதில் உள்ளதாகவும் கூறினார்.
செந்தில் செல்வராசு
உட்லண்ட்ஸ் சுகாதார வளாக மருத்துவமனையின் கட்டுமானத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கான்கிரீட் பணிகளில் ஈடுபட்டவர் செந்தில் செல்வராசு.
தொடர்புடைய செய்திகள்
அந்த மருத்துவமனை 2023 டிசம்பரில் திறக்கப்பட்டது.
தற்போது செனோகோ தங்குவிடுதியில் உள்ள அவர், ஒவ்வொரு நாள் காலையிலும் தமது நிறுவனத்தின் லாரியில் வேலைக்குச் செல்லும்போது உட்லண்ட்ஸ் மருத்துவமனையைக் கடந்து செல்வதாகவும் அதன் கட்டுமானத்தில் பணிபுரிந்த நாள்கள் இன்னும் பசுமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை செய்ய வந்த செல்வராசு, 35, “பல்வேறு மக்கள் தங்களது உடல்நலத்திற்காக நாடி வரும் ஓர் இடத்தைக் கட்டுவதில் எனக்கும் பங்கு இருந்தது என்பதை அறிந்து பெருமையடைகிறேன்,” என்றார்.
சிங்கப்பூரில் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையைக் கண்டு வியப்படைவதாகக் கூறுகிறார் செல்வராசு. குறிப்பாக, வெளிநாட்டு ஊழியர் நலனில் பெரிதும் அக்கறை காட்டப்படுவதாகவும் அதனால் சிங்கப்பூர் தங்களுக்கான நாடு, தங்களது இரண்டாவது வீடு என்ற உணர்வும் தம்மைப் போன்றோரிடம் மேலோங்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.
“இங்கு வேலை செய்ய ஏராளமானோர் வருகின்றனர். கடினமாக உழைக்கின்றனர். சிலர் காயமடைகின்றனர், சில இடங்களில் அவர்களின் உயிர்கூட போகிறது. இங்கு கட்டடங்கள் அழகழகாக இருப்பதைப் பார்ப்பவர்கள் அதன் பின்னணியில் நூற்றுக்கணக்கான ஊழியர்களின் கடின உழைப்பு உள்ளது என்பதை நினைத்துப் பார்ப்பார்கள்,” என்றார் அவர்.
பஞ்சவர்ணம் பொற்கொடி
சிங்கப்பூரில் பணியாற்றுவதில் பெருமைகொள்வதாகக் கூறும் மற்றொருவர் பஞ்சவர்ணம் பொற்கொடி.
கடந்த 2008ஆம் ஆண்டு தமது 26வது வயதில் சென்னையில் இருந்து தாதியாக வேலை செய்ய சிங்கப்பூர் வந்த பொற்கொடி, முதல்முறை விமானத்தில் பறக்கும் அனுபவம் அப்போது கிடைத்ததாகக் கூறினார். 17 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ரென் சி சமூக மருத்துவமனையில் தற்போது உதவி தாதிய மருத்துவர் பணியில், ஏறத்தாழ 30 தாதியரை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கிறார் அவர்.
இங்கு வந்த புதிதில் நோயாளிகள் பேசும் மாண்டரின், மலாய் மொழிகளைப் புரிந்துகொள்ளச் சிரமப்பட்டதாகக் கூறும் பொற்கொடி, அதற்காக அந்த மொழிகளைக் கற்கத் தொடங்கியதாகத் தெரிவித்தார். தன்னம்பிக்கையை வரவழைத்து, நோயாளிகளிடம் அந்த மொழிகளில் தெரிந்த அளவுக்குப் பேசி, அவர்களுடன் ஈடுபாட்டை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார் அவர்.
தமது ஒட்டுமொத்த அனுபவம் குறித்து கூறுகையில், “சிங்கப்பூர் எனது இரண்டாவது வீடாக ஆகிவிட்டது. நான் பணிபுரியும் மருத்துவமனை எனது குடும்பத்தைப் போன்றது. சிங்கப்பூரில் நான் பெற்ற அனுபவம் முழுவதும் அருமையானது. அதனை வர்ணிக்க வார்த்தை இல்லை,” என்றார்.
பிலிப்பீன்ஸ் பணிப்பெண்
அடுத்ததாக, சிங்கப்பூரை வண்ணமய நகராகக் காணும் லெய்சில் மெனெஸ், 46, என்னும் பணிப்பெண் தமது வாழ்நாளில் பாதியை சிங்கப்பூரில் கழித்துவிட்டார். பிலிப்பீன்சில் இருந்து 2002ஆம் ஆண்டு இங்கு வேலை செய்ய வந்தவர், தேசிய தினக் கொண்டாட்ட அதிசயங்களைக் கண்டு பிரமிப்பதாகக் கூறினார். சிங்கப்பூர்க் கொடியுடன் பறக்கும் விமானங்களையும் வாணவேடிக்கைகளையும் கண்டு பல வேளைகளில் ஆனந்தக் கண்ணீர் விட்டதாக அவர் தெரிவித்தார்.
“ஒரு பணிப்பெண்ணாக சிங்கப்பூரின் வளர்ச்சியில் நானும் பங்கெடுத்துள்ளேன். நாங்கள் இருப்பதால், தங்களது குழந்தைகளையும் முதியோர்களையும் பற்றிக் கவலைப்படாமல் முதலாளிகள் நிம்மதியாக இருக்கிறார்கள். தேசிய தினக் கொண்டாட்டம் நானும் அதில் சம்பந்தப்பட்டதைப் போன்ற உணர்வையும் சிங்கப்பூரைச் சார்ந்தவள் என்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக,” அவர் கூறியுள்ளார்.
பொது விடுமுறை என்பதால், ஒவ்வோர் ஆண்டும் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வுகளை பூங்கா ஒன்றிலிருந்து தமது தோழிகளுடன் கண்டு ஆனந்தம் கொள்வதாக லெய்சில் தெரிவித்தார். அதற்காக அன்றைய தினம் சிவப்பு, வெள்ளை உடையணிந்து கன்னத்தில் சிங்கப்பூர் கொடியை பச்சைகுத்திக்கொள்வது வழக்கம் என்றார் அவர்.

