தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு 45,000 படுக்கை வசதி கொண்ட ஆறு புதிய தங்குவிடுதிகள்

2 mins read
48d19677-c739-447d-be0b-bdd7d9499236
துக்காங் இன்னோவே‌‌ஷன் லேனில் மனிதவள அமைச்சு கட்டிவரும் புதிய தங்குவிடுதி. - படம்: சாவ்பாவ்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏறக்குறைய 45,000 படுக்கை வசதி கொண்ட ஆறு புதிய தங்குவிடுதிகள் அடுத்த சில ஆண்டுகளில் கட்டப்படும் என்று மனிதவள மூத்த துணையமைச்சர் கோ போ கூன் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) அறிவித்தார்.

ஜாலான் துக்காங்கில் 2,400 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கக்கூடிய மனிதவள அமைச்சின் புதிய தங்குவிடுதியும் அதில் அடங்கும். அது 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களுக்குப் போதுமான தங்குவிடுதிகள் இருப்பதை உறுதிசெய்ய மனிதவள அமைச்சின் நீண்டகால உத்தி குறித்து இயோ சூ காங் நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹொன் வேங் எழுப்பிய கேள்விக்கு டாக்டர் கோ பதிலளித்தார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு கொடுத்த தகவலின்படி, பயனியர் லாட்ஜ் என்ற பெயரில் மற்றொரு புதிய தங்குவிடுதி சூன் லீ சாலையில் அமைக்கப்படவிருக்கிறது.

வீ ஹர் ஹோல்டிங்ஸ் கட்டுமான, சொத்துக் குழுமம் எட்ஜ்ப்ரோப்.எஸ்ஜி தளத்தில் பதிவிட்ட தகவலின்படி இவ்வாண்டு அக்டோபரில் கட்டிமுடிக்கப்பட்டப் பின் பயனியர் லாட்ஜ் தங்குவிடுதியில் 10,500 வெளிநாட்டு ஊழியர்கள் வரை தங்க முடியும்.

9,000 வெளிநாட்டு ஊழியர்கள் வரை தங்கியிருந்த இரண்டு செம்பவாங் தங்குவிடுதிகள் இம்மாதம் மூடப்பட்ட நிலையில், டாக்டர் கோ மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.

படுக்கைப் பற்றாக்குறையால் இம்மாத இறுதிக்குள் நிறுவனங்கள் மாற்றுவழிகளைத் தேடி அலைகின்றன.

படுக்கைகளின் எண்ணிக்கையைக் கூட்ட அரசாங்கம் தங்குவிடுதிகளுடன் இணைந்து செயல்படுகிறது என்றும் டாக்டர் கோ தெரிவித்தார்.

காலாவதியாகவிருக்கும் தங்குவிடுதிகளின் குத்தகைக் காலத்தை முடிந்தவரை நீட்டிக்கவும் அரசாங்கம் முற்படுகிறது என்றார் அவர்.

இருப்பினும், வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் ஊழியர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போனால் நீண்டகாலத்தில் படுக்கைப் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்று டாக்டர் கோ சுட்டினார்.

எனவே, வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொள்ள, உற்பத்தியைப் பெருக்கும் வழிகளை முதலாளிகள் கையாளவேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்