தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சட்ட ஆலோசனை வழங்கும் நிலையம்

3 mins read
e7b2b5b0-711a-4fd3-ade6-db8d0240c1d9
நிலையத்தின் அதிகாரபூர்வ தொடக்க விழாவில் (இடமிருந்து) வெளிநாட்டு ஊழியர் சிறப்பு நிதியின் தலைவர் குவா பூன் வீ, ‘புரோ போனோ எஸ்ஜி’ அமைப்பின் தலைவர் தினே‌ஷ் தில்லான், வெளிநாட்டு ஊழியர் பிரிவின் ஆலோசகர் இயோ குவாட் குவாங்,  மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், வெளிநாட்டு ஊழியர் நிலைய நிர்வாக இயக்குநர் மைக்கேல் லிம், என்டியுசி உதவித் தலைமைச் செயலாளர் பேட்ரிக் டே. - படம்: தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு மோசடி, பணி தொடர்பான சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளில் உதவவும், பணியிட ஒப்பந்தம், உரிமைகள் உள்ளிட்ட இன்னபிற சட்டரீதியான ஆதரவுகளை வழங்கவும் ‘வெளிநாட்டு ஊழியர்கள் சட்ட நிலையம்’ அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் நிலையமும் ‘புரோ போனோ எஸ்ஜி’ அமைப்பும் இணைந்து தொடங்கியுள்ள இந்நிலையம் சனிக்கிழமை (ஏப்ரல் 12) திறந்துவைக்கப்பட்டது. இந்நிலையம் வார நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5.45 மணிவரையும் சனிக்கிழமைகளில் காலை 9 மணிமுதல் நண்பகல் 12 மணிவரையும் செயல்படும்.

மனிதவள அமைச்சு, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் அந்நிலையத்தைத் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர் நிலைய நிர்வாக இயக்குநர் மைக்கேல் லிம் உள்ளிட்ட பிற பேராளர்களும் பங்கேற்றனர்.

சிராங்கூன் ரோட்டில் உள்ள வெளிநாட்டு ஊழியர் நிலையத்தில் அமைந்துள்ள இச்சட்ட நிலையம், பணியிட விபத்துகள், சம்பளப் பிரச்சினை, பணப்பறிமாற்றம் தொடர்பான சிக்கல் என அவர்களது வாழ்வைப் பாதிக்கும் பலவித சிரமங்களுக்குச் சட்ட ரீதியான உதவிகளை வழங்கும்.

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், சிங்கப்பூர்த் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவற்றின் முயற்சியில் இந்நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

“வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுடன் பிற சமூக அமைப்புகளும் ஆதரவளிப்பது அவசியம். இது ஒரு வலுவான சமூக ஆதரவுக் கட்டமைப்பாக அமையும்,” என்று அமைச்சர் கோ போ கூன் கூறினார்.

இத்தகைய சட்ட நிலையம் 2022ஆம் ஆண்டு முன்னோடித் திட்டமாக அங்கூலியா பள்ளிவாசலில் தொடங்கப்பட்டது. அதில் தமிழ், இந்தி, வங்காள மொழிகளில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை அங்குச் சட்ட ஆலோசனை கோரி 467 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஊழியர் நிலையம் மூலமாகவும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 56 வழக்குகள் ‘புரோ போனோ எஸ்ஜி’ அமைப்பிற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஓராண்டுகாலமாகச் சம்பளமின்றி பணியாற்றிய இல்லப் பணிப்பெண், தன் மீது சுமத்தப்பட்ட குற்றம்குறித்த புரிதலற்ற ஊழியர் போன்ற சட்ட ஆதரவு பெற வழியின்றிச் சிக்கித் தவித்த சில சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசிய ‘புரோ போனோ எஸ்ஜி’ அமைப்பின் தலைவர் தினே‌ஷ் தில்லான், அவர்களுக்குச் சட்ட ஆதரவு எளிதில் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டினார்.

“வெவ்வேறு நாடுகளிலிருந்து பணியாற்ற வரும் ஊழியர்களுக்கு, வழக்கறிஞர்களை அணுகுவதும், சட்ட ஆலோசனை நாடுவதும் பயமளிக்கலாம். அதனை எதிர்கொள்ள, கிரிக்கெட் போட்டிகள் போன்ற ஒன்றுகூடல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இது வல்லுநர்களையும், ஊழியர்களையும் ஒன்றிணைத்து, அவர்கள் எளிதில் அணுக வழிவகுக்கிறது,” என்றும் சொன்னார் வழக்கறிஞருமான தினே‌ஷ்.

சட்ட ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், அதனைத் தாண்டி முழுமையான ஆதரவு தேவைப்பட்டால், வழக்கிற்கேற்பவும், ஊழியரின் தேவைகளைப் பொறுத்தும் அதற்கான வசதிகள் செய்து தரப்படும் என்றும் சொன்னார்.

சிங்கப்பூரின் அறுபதாவது ஆண்டைக் கொண்டாடும் வேளையில் சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வது ஒரு சமூகமாக நமது கடமை என்றார் திரு தினேஷ். இது சமூகம் குறித்த நேர்மறைப் பார்வையையும் புரிதலையும் அடுத்த தலைமுறைக்கும் உணர்த்தும் என்பது அவரின் நம்பிக்கை

அங்கூலியா பள்ளிவாசலில் செயல்படும் சட்ட ஆலோசனை தொடரும் என்றும் அது ஊழியர்கள் எளிதில் அணுகும் இடம் என்பதால் இங்கு முழு நேரமாகச் செயல்படும் என்றும் சொன்னார் வழக்கறிஞரும் பிரதிநிதித்துவ துணைத் தலைவருமான திரு பிரேம்நாத் விஜயகுமார்.

‘புரோ போனோ எஸ்ஜி’ சார்பில் ஒரு வழக்கறிஞர் எப்போதும் அந்நிலையத்தில் இருப்பார் என்றும், அமைப்பின் 14 வழக்கறிஞர்கள், தொண்டூழியம் செய்யும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் தேவைக்கேற்ப உதவுவார்கள் என்றும் திரு பிரேம்நாத் கூறினார்.

சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் வெளிநாட்டு ஊழியர் சுப்பையா ஐயப்பன், “பணியிலும், அன்றாட வாழ்விலும் சிரமங்களைச் சந்திக்கும் என்னைப் போன்ற ஊழியர்களுக்கு இந்நிலையம் உதவியாக இருக்கும். குறிப்பாக, வந்து சில ஆண்டுகளே ஆன ஊழியர்களுக்குப் பணியுடன் வரும் பல்வேறு ஆதரவுகள் குறித்தும், உரிமைகள் குறித்தும் தெரிவதில்லை. அவர்களுக்கு இந்நிலையம் தெரியும் என்பதால், சட்ட ஆலோசனை இங்கு வழங்கப்படுவது நன்று,” என்றார்.

குறிப்புச் சொற்கள்