சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடிப்படை கணினித் திறன்களைக் கற்பிக்கும் வகுப்புகளை லாப நோக்கமற்ற அமைப்பான ‘தி கலர்ஸ்’ அறநிறுவனம் நடத்தி வருகிறது.
‘பவர்பாயிண்ட் ஸ்லைடுகள்’ போன்றவற்றை எவ்வாறு உருவாக்குவது போன்றவை அவர்களுக்குக் இந்த ஆறு வாரப் பயிற்சியில் கற்றுத் தரப்படுகிறது.
இந்தப் பயிற்சி வகுப்புகளை அந்த அறநிறுவனம் ஜூன் மாதத்திலிருந்து நடத்தி வருகிறது.
இதுவரை இந்தியா, பங்ளாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் அந்த வகுப்புகளில் சேர்ந்து அடிப்படை கணினித் திறன்களைக் கற்றுக்கொண்டனர்.
அடிப்படை கணினித் திறன்களைக் கற்றுக்கொள்வது மட்டுமின்றி வகுப்பில் சேர்ந்து பயிலும் வெளிநாட்டு ஊழியர்களின் நட்பு வட்டமும் விரிவடைகிறது.
புதிதாக திறக்கப்பட்ட செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சேவையாற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒன்பது நிலையங்களில் இது முதலாவது நிலையம்.
‘ஹோப் இனிஷியேட்டிவ் அலயன்ஸ்’ எனும் லாப நோக்கமற்ற அமைப்புடன் இணைந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இத்திட்டம் வெளிநாட்டு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதாக ‘தி கலர்ஸ்’ அறநிறுவனத்தின் நிறுவனர் ஐசக் ஓங் கூறினார்.
“வெளிநாட்டு ஊழியர்களை சமூகத்தின் ஒரு பகுதியாகப் பார்க்காமல் அவர்கள் செய்யும் வேலையை அடிப்படையாகக் கொண்டு அவர்களுடன் பழகும்போது அவர்களுக்கும் நமக்கும் இடையே எவ்வித இணைப்பும் இருக்காது. இதைச் சரிசெய்ய நான் முயன்று வருகிறேன். திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும் நட்பு வட்டத்தை விரிவுப்படுத்தவும் இந்த வெளிநாட்டுச் சகோதரர்களுக்கு இத்திட்டம் வாய்ப்பு வழங்குகிறது. பயிற்சி அளிக்கும் தொண்டூழியர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இடையே நட்பு மலர்கிறது,” என்று 36 வயது திரு ஓங் தெரிவித்தார்.
‘தி கலர்ஸ்’ அறநிறுவனத்தைத் திரு ஓங் 2022ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாகத் தொடங்கினார்.
முதலில் திரு ஓங்கும் 12 தொண்டூழியர்கள் மட்டுமே இருந்தனர்.
குடும்ப சேவை நிலையங்களுடன் இணைந்து குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவினர்.
குறைந்த வருமான குடும்பங்கள் வசிக்கும் வாடகை வீடுகளைப் புதுப்பிக்க அவர்கள் உதவி செய்தனர்.
இதுவரை 15 வாடகை வீடுகளைப் புதுப்பிக்க ‘தி கலர்ஸ்’ அறநிறுவனம் உதவியுள்ளது.
தற்போது ‘தி கலர்ஸ்’ அறநிறுவனத்துக்கு 700 தொண்டூழியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

