வெளிநாட்டு ஊழியர்களைப் பாராட்டுவதற்காக மெக்டோனல்ட்ஸ் விரைவு உணவகம், இரண்டாவது முறையாக சமூகக் கொண்டாட்டத்தை நடத்தியுள்ளது.
‘மைக்ரன்ட் அண்ட் மீ’ (Migrant and Me) என்ற வெளிநாட்டு ஊழியர் நல ஆர்வலர் குழுவுடன் இணைந்து மெக்டோனல்ட்ஸ் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
அக்டோபர் 24ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, வேலையிட விபத்தால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் 18 பேரை உபசரித்துக் கொண்டாடியது.
இரட்சண்ய சேனையின் ‘சோஜூர்ன்’ அமைப்பின் அவசரகால உதவி நிலையத்தைச் சேர்ந்த இந்த ஊழியர்கள் தொண்டூழியர்களுடன் ஒன்றுகூடிக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஊழியர்கள் மெக்டோனல்ட்ஸ் உணவு வகைகளைச் சுவைத்ததுடன் ரங்கோலிக் கோலங்களை வரைவதிலும் ஈடுபட்டனர்.
‘மைக்ரன்ட் அன்ட் மீ’ நிறுவனத்துடன் தொடர்ந்து பங்காளித்துவ உறவு முறையில் இணைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைவதாக மெக்டோனல்ட்ஸின் நிர்வாக இயக்குநர் பெஞ்சமின் போ கூறினார்.
“சமூகத்தையும் சமூக ஒருங்கிணைப்பையும் கொண்டாடுகிறது தீபாவளி. வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்கான சிறந்த வாய்ப்பாக இது உள்ளது,” என்று திரு போ கூறினார்.
சமூகப் பரிவின் சிறப்பை இந்தக் கொண்டாட்டம் காட்டுவதாக ‘மைக்ரன்ட் அன்ட் மீ’ அமைப்பின் நிர்வாக இயக்குநர் இசபெல் புவா தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“வெளிநாட்டு ஊழியர்களுக்கு மதிப்பளித்து, அவர்களை ஒருங்கிணைக்கும் சூழலை உருவாக்க இந்தப் பங்காளித்துவம் வகைசெய்கிறது,” என்றார் திருவாட்டி புவா.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது மட்டுமன்றி மெக்டோனல்ட்ஸ் உணவகம் 1,500 உணவுப் பற்றுச்சீட்டுகளையும் வழங்கியது.