வெளிநாட்டு ஊழியர்களுக்கு மேம்பட்ட சுகாதார சேவைகளை அளிக்கும் பொருட்டு ‘சாட்டா காம்ஹெல்த்’ எனும் அறநிறுவனம் (SATA CommHealth) ஒரு முதன்மைப் பராமரிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வலியைச் சமாளிக்கும் முறை, சுகாதாரம் சார்ந்த கல்வி, பணியிடப் பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய நோக்கங்கள் இந்த முதன்மைப் பராமரிப்புத் திட்டத்தில் அடங்கும்.
வியாழக்கிழமை (செப்டம்பர் 26) ‘சாட்டா காம்ஹெல்த்’ அறநிறுவனம் நடத்திய அதன் முதல் மாநாட்டில் இந்தப் புதிய முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
“இந்த முதன்மைப் பராமரிப்புத் திட்டம் மருத்துவ மையங்கள், மருந்தகங்கள் உட்பட வெளிநாட்டு ஊழியர்களுக்கு மலிவான கட்டணத்தில், எளிமையான வகையில் முதன்மைப் பராமரிப்பை வழங்குகின்றது,” என்றார் மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன்.
‘ஹாலிடே இன் ஏட்ரியம்’ ஹோட்டலில் நிகழ்ந்த இந்த மாநாட்டில் சுகாதார நிபுணர்கள், தொழில்துறைத் தலைவர்கள், பங்குதாரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் அழுத்தமான சவால்களைப் பற்றி கலந்துரையாடிர்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை, ஆண்டுதோறும் சுகாதாரப் பரிசோதனை, தொலைமருத்துவ (telemedicine) சேவை போன்றவற்றை இந்தத் திட்டம் வழங்கும் என்று விவரித்தார் ‘சாட்டா காம்ஹெல்த்’ ஆலோசகர் செரில் லதா கிளென்.
“வெளிநாட்டு ஊழியர்களின் ஒட்டுமொத்த உடல்நல, மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்க ‘சாட்டா காம்ஹெல்த்’ தொடர்ந்து பங்களிக்கும்,” என்றார் செரில்.
41 வயது வெளிநாட்டு ஊழியர் சுல்தான், கடந்த 18 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்துவருகிறார். உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவர், மருத்துவ ஆலோசனை, மருந்துகள் உட்பட மாதந்தோறும் $60 செலவழித்தார். மேலும் அவர் மருத்துவ ஆலோசனை, மருந்துகளைப் பெற வெகுநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் புதிய முயற்சிகளால் இப்போது சுல்தான் $5 எனும் குறைந்த கட்டணத்தில் வெகுவிரைவாக மருத்துவரைச் சந்திக்க முடிகிறது என்றார்.
“சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சுகாதாரப் பராமரிப்பு தற்போது பெரிதும் மேம்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். இத்தகைய திட்டங்கள் இன்னும் பல்வேறு மொழிகளில் இருந்தால் நன்றாக இருக்கும்,” என்றார் அவர்.
புதிய முயற்சியின் ஒரு பகுதியாக ‘எலைட்ஃபிட்.ஏ’ (EliteFit.A) எனும் விரிவான, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் உடற்பயிற்சித் திட்டம் தற்போது நடப்பில் உள்ளது.
இந்த உடற்பயிற்சித் திட்டம், குறிப்பாக தசைக்கூட்டுக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும். தினமும் வேலைப் பளுவினால் பாதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்களின் பொதுவான தசை, உடல் பிரச்சினைகளுக்கு இது தீர்வளிக்கும்.
கொவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து ‘சாட்டா காம்ஹெல்த்’ வெளிநாட்டு ஊழியர்களை அவசர மருத்துவச் சூழ்நிலைகளுக்குத் தயார்ப்படுத்தி, அவர்களுக்குச் சுகாதார சேவைகளை வழங்க முற்பட்டுள்ளது.
“சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களைச் சிறந்த முறையில் ஆதரிக்க, பல நிறுவனங்கள் முற்பட வேண்டும். அவர்களுக்கு ஒரு மேம்பட்ட சுகாதாரச் சூழலை உருவாக்குவது நோக்கமாகும்”, என்றார் பெங்களூர் செயின்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் அரவிந்த் கஸ்தூரி.
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி சிங்கப்பூரில் வேலை அனுமதி வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 11,33,000 பேர் உள்ளனர். பணியிடச் சுகாதாரம், மனநலம் சார்ந்த சேவைகள், நாள்பட்ட நோய்கள் பற்றிய மருத்துவக் கல்வி, ஆலோசனை போன்ற அம்சங்களை வெளிநாட்டு ஊழியர்களுக்கு எளிதாக்க ‘சாட்டா காம்ஹெல்த்’ முற்பட்டுள்ளது.