சாலையோரம் மதுபானம் அருந்தும், உறங்கும் வெளிநாட்டு ஊழியர்கள்

2 mins read
aab29b13-c392-417d-84af-ed5ae0f17cde
மதுபானம் அருந்திவிட்டு சாலையில் படுத்து உறங்கிய வெளிநாட்டு ஊழியர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் தங்கள் தங்குவிடுதிக்கு அருகில் உள்ள சாலையோரத்தில் அமர்ந்து உணவருந்துவதும் மதுபானம் பருகுவதும் படுத்து உறங்குவதும் பதற்றத்தை ஏற்படுத்துவதாக அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகன ஓட்டுநர்கள் சற்று அசந்து தங்கள் வாகனத்தை சாலையோரம் உள்ள நடைபாதையின் மேல் தவறுதலாக ஏற்றினால் அங்கு அமர்ந்திருக்கும் அல்லது படுத்து உறங்கும் வெளிநாட்டு ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அவர்கள் கூறினர்.

கடந்த மே மாதம் 12ஆம் தேதி இரவு 10 மணி அளவில், ஓல்டு சுவா சூ காங் சாலை அருகில் உள்ள ஜாலான் லேகாரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் சாலையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்ததை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் கண்டனர்.

அப்போது பல வாகனங்கள் அவரைக் கடந்து சென்றன.

அவரைத் தட்டி எழுப்ப அவரது இரு நண்பர்கள் எவ்வளவு முயன்றும் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு அவரிடம் தமிழில் உரக்கப் பேசி அவரைப் பிடித்துக் குலுக்கிய பிறகே அந்த ஆடவரின் தூக்கம் கலைந்தது.

அங்கிருந்து ஏறத்தாழ 30 மீட்டர் தூரத்தில் உள்ள ஜாலான் தபிசானுக்குள் நுழைந்த வாகனங்கள் அவற்றின் வேகத்தைக் குறைத்துக்கொண்டன.

சுங்கை தெங்கா தங்குவிடுதிக்கு அருகில் உள்ள இரு தடச் சாலையில் வெளிநாட்டு ஊழியர்கள் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்ததும் மதுபானம் பருகிக்கொண்டிருந்ததும் அதற்குக் காரணம்.

தமது தங்குவிடுதியில் மதுபானம் குடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே அதற்கு வெளியே இருக்கும் நடைபாதையில் அமர்ந்து மதுபானம் குடிப்பதாகவும் வெளிநாட்டு ஊழியரான திரு விஜய் தெரிவித்தார்.

“தங்குவிடுதிக்கு வெளியே அமைதியாக இருக்கிறது. நல்ல காற்றோட்டமாக, அதிக வெப்பமில்லாமல் உள்ளது. கூட்டமும் அவ்வளவாக இல்லை, எங்கு வேண்டுமானாலும் உட்காரலாம்,” என்று கிராஞ்சி வேயில் உள்ள நடைபாதையில் அமர்ந்து பீர் அருந்தியபடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார் திரு விஜய்.

தங்குவிடுதிகளில் மதுபானம் அருந்துவதைத் தடை செய்யும் சட்டங்கள் இல்லை.

இருப்பினும், சில தங்குவிடுதிகளில் மதுபானம் அருந்த அனுமதி இல்லை.

தங்குவிடுதிகளை நடத்தும் சிலர் இந்த விதிமுறையைச் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இரவு 10.30 மணியிலிருந்து காலை 7 மணி வரை பொது இடங்களில் மதுபானம் அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்