மதுராஜன் பிரகாஷ். 27 வயதாகும் இவர் இந்தியாவைச் சேர்ந்தவர்.
மின்னியல் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் இவர், வேலைநாள்களில் வழக்கமாக நிறுவனச் சீருடையில் வேலைபார்ப்பார்.
ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) புத்தாடைகள், கண்கவர் காலணிகள், தோளில் அலங்காரப் பை என இவரது தோற்றமே மாறியிருந்தது.
செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் முகத்தில் பெருமை மிளிர, படக்கலைஞர்களின் கேமராக்களுக்குப் புன்னகை சிந்தி நின்றிருந்தார் பிரகாஷ்.
வெளிநாட்டு ஊழியர் நலனுக்கான அறநிறுவனமான ‘இட்ஸ்ரெயினிங்ரெயின்கோட்ஸ்’ (ஐஆர்ஆர்) அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பிரகாஷைப் போன்ற வெளிநாட்டு ஊழியர்கள் மொத்தம் 10 பேர் அலங்கார நாயகர்களாகப் பவனிவந்தனர்.
சிங்கப்பூரர்கள் வெளிநாட்டு ஊழியர்களைக் கட்டுமானத் தளங்களிலும் தொழிற்துறைப் பேட்டைகளிலும் பணிபுரியும் குழுவினர் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல் அவர்களைத் தனித்துவமிக்க நபர்களாகக் கருதுவதை ஊக்குவிப்பது இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்று ஐஆர்ஆர் அமைப்பு கூறியது.
நிகழ்ச்சியில் இந்தியா, பங்ளாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து வந்துள்ள ஊழியர்களுக்குத் தொழில்முறை நிபுணத்துவம் வாய்ந்தோரைக் கொண்டு முக ஒப்பனையுடம் சிகை அலங்காரமும் ஆடை அலங்காரமும் இலவசமாகச் செய்யப்பட்டன.
ஆண்கள் சஞ்சிகைகளில் இடம்பெறும் விளம்பர அழகர்களைப்போலப் படத்துக்கு எவ்வாறு கம்பீரமாகக் காட்சியளிப்பது என்று கற்றுத்தரப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு தீபாவளிக்கும் தன் பெற்றோர் புதிய துணிகள் வாங்கித்தந்ததை இது நினைவுபடுத்தியதாகக் கூறினார் பிரகாஷ். சிங்கப்பூர் வந்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் விலை அதிகம் என்பதால் இவர் புதிய உடை வாங்கியதில்லை. வேலை இருப்பதால் இந்த ஆண்டு குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாடும் வாய்ப்பும் இல்லை. எனவே, “இது எனக்குத் தீபாவளிப் பரிசு,” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் பிரகாஷ்.
வெளிநாட்டு ஊழியர்கள் ஒரு நாள் நவீன ஆடைகளுக்கு நிறுவனத் தூதர்களாக விளங்கும் நாள் வரவேண்டும் என்பது தனது விருப்பம் என்று கூறினார் ஐஆர்ஆர் அமைப்பின் நிறுவனர் தீபா சுவாமிநாதன்.
அத்தகைய நிலை அவர்களுக்கு தரக்கூடிய தன்னம்பிக்கை விலைமதிப்பற்றது என்றார் அவர். உள்ளூர்ச் சமூகம் அவர்களை இவ்வகையில் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பை அவர் சுட்டினார்.
உள்ளூர் ஆடை நிறுவனமான கிரே (Graye), பெட்ரோ (PEDRO) காலணிகளைத் தயாரிக்கும் சார்ல்ஸ் அண்ட் கீத் நிறுவனம் இரண்டும் ஐஆர்ஆர் அமைப்பின் முயற்சிக்கு ஆதரவு வழங்கியுள்ளன.
அனைவரையும் உள்ளடக்கிய அம்சத்தில் நம்பிக்கை இருப்பதால் இந்த முயற்சிக்கு ஆதரவு தந்ததாக பெட்ரோ பேச்சாளர் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் கவனிக்கப்படாதவர்கள் என்று கூறிய பேச்சாளர், அவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர உதவும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் எனத் தாங்கள் கருதியதாகக் கூறினார்.
ஆடை அலங்காரம் என்பது வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்று கருதுவதாகக் கூறியது கிரே நிறுவனம்.
இரு நிறுவனங்களும் பத்து ஊழியர்களுக்கான உடைகள், பைகள், காலணிகளை வழங்கின. ஒவ்வொரு பொருளும் $100க்குமேல் மதிப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பங்கெடுத்த மற்றோர் ஊழியர் 32 வயது இந்திய நாட்டவரான சந்திரசேகர். 13 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் வேலைசெய்யும் இவர் தன் தாயாரின் ஊக்குவிப்பால் இதில் கலந்துகொண்டதாகக் கூறினார்.
பங்ளாதேஷைச் சேர்ந்த 29 வயது சித்தா சிரஞ்சித், 34 வயது சர்கெர் முகமது அலமின் போன்றோரும் இந்த வாய்ப்பால் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறினர்.
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படங்கள் ஐஆர்ஆர் அமைப்பு, கிரே, பெட்ரோ ஆகியவற்றின் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிடப்படும்.