சிங்கப்பூரில் இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து ஜூலை 16ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஏறக்குறைய 1,002 வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகள் குறைந்தது $1 மில்லியனுக்கு விலை போனதாகப் புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் ஒட்டுமொத்தமாகக் கடந்த ஆண்டு 1,593 மறுவிற்பனை வீடுகள் மில்லியன் வெள்ளிக்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது. அந்த எண்ணிக்கையை இவ்வாண்டின் விற்பனை தாண்டிவிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 110 மறுவிற்பனை வீடுகளைக் கடந்த ஆண்டு மில்லியன் வெள்ளிக்கு விற்பனை செய்த புரோப்நெக்ஸ் நிறுவனம், பயனீட்டாளர் ஆய்வை நடத்தியது.
வெவ்வேறு வயதில் உள்ளோர் மில்லியன் வெள்ளிக்கு வீடு வாங்கியதை ஆய்வு சுட்டியது. அவர்களில் ஏறக்குறைய 71 விழுக்காட்டினர் 30லிருந்து 39 வயதுக்கும், 40லிருந்து 49 வயதுக்கும் இடைப்பட்டிருந்தனர்.
மேலும், மில்லியன் வெள்ளிக்கு விலைபோன மறுவிற்பனை வீட்டை வாங்கிய பத்தில் ஏழு பேர் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் பிரிவில் வேலை செய்தனர்.
அத்தகையோரில் ஏறக்குறைய 35.5 விழுக்காட்டினரின் மாதாந்தர சம்பளம் $10,001லிருந்து $16,000க்கு இடைப்பட்டிருந்தது. கூடுதலாக, 20.0 விழுக்காட்டினரின் மாதாந்தர சம்பளம் $16,001லிருந்து $20,000க்கும் 3.6 விழுக்காட்டினரின் மாதாந்தர சம்பளம் $20,001லிருந்து $25,000க்கும் இடைப்பட்டிருந்தது.
மில்லியன் வெள்ளி வீட்டை வாங்கியோரில் கிட்டத்தட்ட 11.8 விழுக்காட்டினரின் சம்பளம் $5,000லிருந்து $10,000க்கும் 0.9 விழுக்காட்டினரின் சம்பளம் $5,000க்குக் குறைவாகவும் இருந்தது.
கிட்டத்தட்ட 30.8 விழுக்காட்டினர் தனியார் வீட்டிலிருந்து வீவக மறுவிற்பனை வீட்டுக்கு மாறினர். ஏறக்குறைய 15.4 விழுக்காட்டினர் பெரிய கழக வீடுகளிலிருந்து மறுவிற்பனை வீடுகளில் குடியேறினர்.
மில்லியன் வெள்ளிக்கு விற்பனையான மறுவிற்பனை வீடுகளில் நான்கறை வீடுகளே அதிகம் விற்கப்பட்டதாக ஆய்வு எடுத்துக்காட்டியது. ஏறக்குறைய 42.7 விழுக்காட்டு நான்கறை வீடுகளும், 35.5 விழுக்காட்டு ஐந்தறை வீடுகளும் 20 விழுக்காட்டு எக்செகியூட்டிவ் வீடுகளும் மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டன.

