லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா), என்டியுசியின் இல்லப் பணியாளர் நிலையத்துடன் (Centre for Domestic Employees) இணைந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) யோகாசனப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
என்டியுசி நிலையமான ஒன் மரினா பொலிவார்ட்டில் காலை 10.30 மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சி மூன்று மணி நேரம் நீடித்தது.
மே தினத்தை முன்னிட்டு இல்லப் பணிப்பெண்களின் மனநலனை மேம்படுத்த அவர்களுக்கு யோகாசனத்தை அறிமுகப்படுத்த இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட இல்லப் பணிப்பெண்கள் கலந்துகொண்டனர்.
அவர்களில் ஒருவர் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த 34 வயதான லவ் மேரி.
“இந்த நிகழ்ச்சி மூலம் நான் மற்ற இல்லப் பணிப்பெண்களைச் சந்திப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. மேலும், இந்த யோகாசனப் பயிற்சி நான் என் வேலையில் இன்னும் கவனத்துடன் செயல்பட உதவும்,” என்றார் மேரி.
யோகாசனப் பயிற்சியை வழிநடத்தினார் யோகா பயிற்றுவிப்பாளர் கே ஆர் ஜீவன், 54.
“இல்லப் பணிப்பெண்கள் அன்றாடம் மனவுளைச்சலை எதிர்கொள்கின்றனர். அதனால் யோகா, தியானம், பிராணயாமா போன்ற சுவாசப் பயிற்சிகள் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார் ஜீவன்.
“இந்திய கலாசாரத்தின் ஓர் அம்சமான யோகாசனத்தை மற்ற இனத்தவரிடம் கொண்டுசேர்க்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது,” என்றார் லிஷாவின் தலைமை மேலாளரான டாக்டர் அப்துல் ரவூப், 53.
“இல்லப் பணிப்பெண்கள் தங்கள் மனநலனை மேம்படுத்த உடற்பயிற்சிகளைக் கற்றுத்தர இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,” என்றார் இல்லப் பணியாளர் நிலையத்தின் துணை இயக்குநர் சந்தியா தேவி, 40.