தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடைகளில் தொடரும் போலி ‘ஆர்டர்’கள்: காவல்துறையிடம் தற்காப்பு அமைச்சு புகார்

2 mins read
f8a04a52-58ff-47c0-b130-2a3e16b57905
தான் ஏமாற்றப்பட்டது குறித்து இன்ஸ்டகிராமில் ‘பிரெடிடேஷன் பேக்கரி’ கடை வெளியிட்ட பதிவு. - படம்: சமூக ஊடகம்

சிங்கப்பூர் ஆயுதப் படையின் பெயரைப் பயன்படுத்தி, கடைகளில் அடுத்தடுத்து ஏழு பொய்யான ஆர்டர்கள் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அது குறித்துக் காவல்துறையிடம் தற்காப்பு அமைச்சு புகார் அளித்து உள்ளது.

மேலும், இதுபோன்ற ஏமாற்றுச் செயலில் சிக்க வேண்டாம் என்று பொதுமக்களை அமைச்சு எச்சரித்து உள்ளது.

இது தொடர்பாக அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) தனது ஃபேஸ்புக் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூர் ஆயுதப் படையின் பெயரைப் பயன்படுத்தி, சிங்கப்பூர் முழுவதும் ஏழு கடைகளில் பொய்யான ஆர்டர் செய்தோரைப் பற்றிய ஆதாரம் எதுவும் சிக்கவில்லை என்று அதில் அமைச்சு கூறியுள்ளது.

வர்த்தகர் உட்பட பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் சந்தேக நடவடிக்கைகள் பற்றிக் காவல்துறையிடம் புகார் அளிக்குமாறும் அது அந்தப் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபோன்ற செயல்களைச் சிங்கப்பூர் ஆயுதப் படை கடுமையாகக் கருதுவதாகவும் அது தெரிவித்துள்ளது.

ஒரே வாரத்தில் பிரியாணி, மலர்க்கொத்து, ரொட்டி என அடுத்தடுத்து மூன்று கடைகளில் போலி ஆர்டர்கள் செய்யப்பட்டு உள்ளன.

ஆக அண்மைய ஏமாற்றுச் சம்பவத்தில் சிக்கியது ‘பிரெடிடேஷன் பேக்கரி’ கடை. ராணுவ அதிகாரி என்று தம்மைக் கூறிக்கொண்ட ஒருவர் அந்தக் கடையிடம் $2,000 மதிப்புள்ள ரொட்டி உள்ளிட்ட பொருள்களை ஆர்டர் செய்த பின்னர் மாயமாகிவிட்டார். அவரைப் பற்றிய எந்தத் தடயமும் சிக்கவில்லை.

அதனால், தயார் செய்யப்பட்ட பொருள்கள் கெட்டுப்போகும் முன்னால் அவற்றை எப்படியாவது மற்றவர்களிடம் விற்கவும் கொடுக்கவும் அந்தக் கடையின் உரிமையாளர் படாத பாடுபட்டார்.

டெஸ்கர் ரோட்டில் உள்ள அந்தக் கடையின் உரிமையாளர் தாம் ஏமாற்றப்பட்ட விதம் குறித்து இன்ஸ்டகிராமில் சனிக்கிழமை (செப்டம்பர் 13) பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்தத் தளத்தில் பின்தொடருவோர் இதுபோன்ற மொத்த விற்பனை ஆர்டர் மோசடிச் சம்பவங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதில் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, செப்டம்பர் 8ஆம் தேதி, புக்கிட் தீமாவில் உள்ள பூக்கடையிலும் அதற்கு மறுநாள் தியோங் பாருவில் உள்ள உணவுக் கடையிலும் பல்லாயிரம் வெள்ளி மதிப்புள்ள பொருள்களுக்கு மோசடிக்காரர்கள் போலி ஆர்டர் செய்த சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

ராணுவத்திலிருந்து அழைப்பதாகக் கூறி, அந்தக் கடைகளில் மலர்க்கொத்துகளுக்கும் கோழி மற்றும் இறைச்சி பிரியாணிகளுக்கும் மர்ம நபர் ஆர்டர் செய்திருந்தார்.

ஆனால், ராணுவத்தில் இருந்து அப்படிப்பட்ட ஆர்டர் எதுவும் செய்யப்படவில்லை என்று தற்காப்பு அமைச்சு மறுத்துள்ளது.

மே மாதம் முதல் நீடித்து வரும் போலி மொத்த விற்பனை ஆர்டர்கள் மூலம் குறைந்தபட்சம் $52,000 இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்து உள்ளது.

ராணுவம் மட்டுமன்றி பள்ளிக்கூட அதிகாரிகள் பெயரிலும் அதுபோன்ற ஏமாற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆசிரியர்கள், பள்ளிக்கூட அலுவலர்கள், அரசாங்கப் பணியாளர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு பெரிய, வழக்கத்திற்கு மாறான ஆர்டர்களை போலியாகச் செய்ததன் மூலம் சில நிறுவனங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளன.

இப்படிப்பட்ட நிலையில், பொருள்களை ஆர்டர் செய்வோரின் விவரங்களைச் சரிபார்க்குமாறும் புதிய வாடிக்கையாளர்களிடம் முன்பணம் பெறுவதற்குப் பதில் ஆர்டருக்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு அதற்கான பொருள்களை விநியோகிக்குமாறும் பொதுமக்களைக் காவல்துறை கேட்டுக்கொண்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்