மூப்படைதலைப் பற்றிய சாதகமான மனப்போக்கு வேண்டும்: அமைச்சர் டான்

1 mins read
ccdeb53b-ec85-40d7-be2b-c1d863ba3c21
மக்கள் செயல் கட்சியின் மூத்தோர் அணி சனிக்கிழமை (செப்டம்பர் 28) ஏற்பாடு செய்திருந்த மதிய விருந்து நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் பங்கேற்றார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஊழியரணியில் மூத்த ஊழியர்களின் அனுபவங்களைப் பயன்படுத்த, மூப்படைதலைப் பற்றிய சாதகமான மனப்போக்கு வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

மக்கள்தொகை தொடர்ந்து மூப்படைந்து வரும் வேளையில் மூத்தோரின் அனுபவங்களையும் அறிவாற்றலையும் பயன்படுத்தும் வாய்ப்புகளை சிங்கப்பூர் பெற்று உள்ளது.

ஆயினும் அது நீண்டகாலத் திட்டமிடலில் செய்யப்பட வேண்டும் என்பதோடு அரசாங்கத்தின் வலுவான ஆதரவோடு மூப்படைதலைப் பற்றிய சாதகமான மனப்போக்கும் தேவைப்படுகிறது என்றார் டாக்டர் டான்.

மக்கள் செயல் கட்சியின் (மசெக) மூத்தோர் அணி சனிக்கிழமை (செப்டம்பர் 28) ஏற்பாடு செய்திருந்த மதிய விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசினார்.

அனைத்துலக மூத்தோர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட மசெக தொண்டர்களும் பங்காளிகளும் கலந்துகொண்டனர்.

மூத்த குடிமக்களை மீண்டும் ஊழியரணிக்குக் கொண்டு வருவதில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் சவால் பற்றி அந்த நிகழ்ச்சியில் எடுத்துரைத்தார் வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சருமான டாக்டர் டான்.

சிங்கப்பூரில், 65 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்ட ஏறத்தாழ 120,000 பேர் தற்போது ஊழியரணியில் இடம்பெறவில்லை.

“வேலை செய்வதன் மூலம் அதற்கான நோக்கத்தையும் சமூகத்துடன் தொடர்ந்து இணைந்து இருக்கும் வாய்ப்பையும் மூத்தோர் பெறுகின்றனர்.

தங்களுக்குப் பொருந்தக்கூடிய வேலையை அவர்கள் செய்யலாம்,” என்றார் அமைச்சர்.

வரும் 2030ஆம் ஆண்டுக்குள், ஓய்வுபெறும் வயதை 65க்கும் மறுவேலைவாய்ப்புக்கான வயதை 79க்கும் உயர்த்த சிங்கப்பூர் திட்டமிட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்