சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (சிமுக) சுவா சூ காங் வேட்பாளர் லாரன்ஸ் பெக், படிப்படியான சம்பள உயர்வு முறை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்புடையதன்று எனத் தெரிவித்துள்ளார்
“தொடக்கத்தில் இத்திட்டம் குறிவைத்த சில துறைகள் தொழில்நுட்பத்தால் வெகுவாக மாறிவிட்டன. துப்புரவுத் துறையில் இயந்திரங்கள் வந்துவிட்டன. பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் பதிலாகக் கண்காணிப்புக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதனால்தான் அனைவரையும் உள்ளடக்கும் குறைந்தபட்ச வருமானத் திட்டத்தை இப்போது பரிந்துரைக்கிறோம்,” என்று சனிக்கிழமை (ஏப்ரல் 26) செய்தியாளர்களிடம் திரு பெக் கூறினார்.
அனைத்துத் துறைகளிலும் குறைந்தது $2,250 மாதச் சம்பளம் இருக்க வேண்டும் என்பதே சிமுகவின் கொள்கை.
இந்த வரம்பு, சந்தையில் கொடுக்கப்படும் சம்பளத்தைவிட அதிகமாக இருந்தால் அடித்தளத்தில் இருப்போரின் சம்பளம் உயரும் என்றும் இதனால் வர்த்தகங்களுக்குச் செலவுகள் அதிகரிக்கும் என்றும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் ஜெஃப்ரி சியாவ் வெள்ளிக்கிழமை குறைகூறியிருந்தார்.
எந்தத் துறைகளில் ஊழியர்களுக்கு உதவி தேவையோ அவற்றைக் குறிவைக்கும் படிப்படியான சம்பள உயர்வு முறையே சிறந்தது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அது குறித்துப் பேசிய திரு பெக், “உள்ளூர் ஊழியரணியைப் பாதுகாப்பதற்காகவே இத்திட்டத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறோம். குறைந்தபட்ச வருமானம் இருந்தால் நிம்மதியாக இருக்கமுடியும். சிறப்பாகப் பணியாற்ற முடியும்,” என்றார்.
ஆனால், அத்திட்டம் மேலோட்டமாக இருப்பதாகவும் ‘எளிதான வழியைத் தேடுவதாகவும்’ துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் குறிப்பிட்டிருந்தார்.
படிப்படியான சம்பள உயர்வு முறையே குறைந்த வருமான ஊழியர்களுக்கு நிலைத்தன்மைமிக்க தீர்வை அளிப்பதாக அவர் கூறினார். ஏனெனில், அது தொழில்துறைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சம்பள உயர்வுகளைத் திறன், உற்பத்தித்திறன் மேம்பாட்டுடன் இணைப்பதாக அவர் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
“அனைவருக்கும் ஒரே குறைந்தபட்ச வருமானம் போதுமானதாக இருக்கும் என நான் கருதவில்லை. அதைவிடக் கடினமானது, ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட குறைந்தபட்ச வருமானத்தை நிர்ணயிப்பதுதான்,” என்றார் திருவாட்டி கான்.
குறைந்த வருமான ஊழியர்களுக்கு ரொக்கம், மத்திய சேமநிதிக் கணக்கு நிரப்புகளை வழங்கும் வேலைநலன் துணை வருமானத் திட்டமும் உதவுவதாக அவர் கூறினார்.

