எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளின் குறைந்தபட்சக் குடியிருப்புக் காலம் 10 ஆண்டுகளாக அதிகரிப்பு

எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளின் குறைந்தபட்சக் குடியிருப்புக் காலம் 10 ஆண்டுகளாக அதிகரிப்பு

2 mins read
76ef5ba5-ed1a-48b2-9e3c-3f18e441f697
முதல்முறை வீடு வாங்குவோருக்கு அதிகமான எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் ஒதுக்கப்பட உள்ளன. - கோப்புப் படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

புதிய எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளை வாங்குவோர், பிற்காலத்தில் வீட்டை விற்பதற்கு முன்னர், குறைந்தபட்சம் பத்தாண்டு காலம் அந்த வீட்டில் தங்கியிருக்க வேண்டும்.

தற்போது ஐந்து ஆண்டுகளாக இருக்கும் குறைந்தபட்சக் குடியிருப்புக் காலம் விரைவில் இரட்டிப்பாக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.

முதல்முறை வீடு வாங்குவோருக்கு அதிகமான வீடுகள் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வீடு வாங்குவோர் 20 விழுக்காட்டுத் தொகையை முன்பணமாகச் செலுத்திவிட்டு, தற்காலிகக் குடியிருப்பு அனுமதிக்குத் தயாராகும் வரை எஞ்சிய தொகையைச் செலுத்துவதைத் தள்ளிப்போட அனுமதிக்கும் ‘தள்ளிவைக்கப்பட்ட கட்டணத் திட்டம்’ கைவிடப்பட இருப்பதாக அமைச்சர் சீ குறிப்பிட்டார். நிதிசார் விவேகத்தை ஊக்குவிப்பதற்காக அவ்வாறு செய்யப்படுவதாக அவர் சொன்னார்.

எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளின் விலை கட்டுப்படியானதாக உள்ளதா என்பது குறித்து எழுந்த கவலைகளைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட மறுஆய்வின் அடிப்படையில் அந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் வெள்ளிக்கிழமை (மே 8) தெரிவித்தார்.

மேலும், அந்தப் புதிய கட்டுப்பாடுகள், எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளுக்கான எல்லா அரசாங்க நில விற்பனைத் தளங்களுக்கும் பொருந்தும் என்றும் அந்தத் தளங்களுக்கு உரிய ஏலக்குத்தகை வெள்ளிக்கிழமை (மே 8) நிறைவடையும் என்றும் திரு சீ கூறியுள்ளார்.

அதேநேரம், ஏற்கெனவே விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட எக்சிகியூட்டிவ் கூட்டுரிமைத் திட்டங்களுக்கோ ஏலக்குத்தகை சமர்ப்பிப்பு நிறைவடைந்துவிட்ட நிலத் தளங்களுக்கோ இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தமாட்டா.

அதன்படி, புதிய கட்டுப்பாடுகள் கான்பெரா டிரைவ், செம்பவாங் டிரைவ் ஆகிய பகுதிகளில் உள்ள தளங்களுக்கு முதன்முதலாக அறிமுகம் காண்கிறது. அவை முறையே மே, ஜூன் மாதங்களில் சொத்து மேம்பாட்டாளர்களுக்கு விற்பனைக்கு விடப்பட உள்ளன.

குறிப்புச் சொற்கள்