செயற்கை நுண்ணறிவில் (ஏஐ) நம்பிக்கையை வளர்க்கக் குறைந்தபட்சப் பாதுகாப்புத் தரநிலைகள், சுதந்திரமான பரிசோதனை ஆகியவை அவசியம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சிறப்புத் தூதர் அமன்தீப் சிங் கில் வலியுறுத்தியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு உலகில் நம்பிக்கை என்பது வெறும் மென்மையான கருத்தாக இல்லாமல் உறுதியான உள்கட்டமைப்பாக இருக்க வேண்டும் என்று, செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) நடந்த 11வது சிங்கப்பூர் அனைத்துலக இணையப் பாதுகாப்பு வாரத் தொடக்க விழாவில் பேசிய திரு சிங் கூறினார்.
ஒவ்வொரு நாடும் பாதுகாப்பான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட திரு சிங், சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்புக் கழகத்தை ஒரு சிறந்த முன்னுதாரணமாகச் சுட்டினார்.
2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்தக் கழகம் தரவுக் கசிவு, இணையப் பாதுகாப்பு மிரட்டல்கள், மோசடிகள் போன்ற ஆபத்துகளைக் கண்டறியப் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்கிறது.
மேலும் கணக்கியல், நிதித் தரநிலைகளைப் போலச் செயற்கை நுண்ணறிவுப் பரிசோதனைக்கும் குறைந்தபட்சத் தரநிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று திரு சிங் வலியுறுத்தினார்.
நாடுகள் ‘ஏஐ’ தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்வது, சம்பவங்கள் குறித்துப் புகாரளிப்பது, வெளிப்படைத்தன்மை ஆகியவை தற்காலிக ஏற்பாடுகளாக இல்லாமல் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்றும் திரு சிங் தெரிவித்தார்.
