தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறப்பாகச் செயலாற்றிய உள்துறைக் குழுவினரை அங்கீகரித்த விருதுகள்

3 mins read
98f745bf-d467-4b30-a0b5-4d45cb9132c6
கண்காணிப்புக் கருவிகளின் காணொளிகளை உடனுக்குடன் பகுப்பாய்வு செய்து பாதுகாப்பற்ற நடைமுறைகளைக் கண்டறியும் ‘சேஃப் எக்ஸ்’ வடிவமைப்பில் பணியாற்றி விருது பெற்ற அணியைச் சேர்ந்த பொறியாளர் முகமது அன்வார் ஜலீல். - படம்: லாவண்யா வீரராகவன்

இவ்வாண்டு நடந்த ஓர் அனைத்துலக ஆய்வின்படி சிங்கப்பூர் சட்ட ஒழுங்கு நிலையில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் அதனை உறுதி செய்வதில் உள்துறைக் குழு முக்கியப் பங்கு வகிப்பதாகவும் கூறியுள்ளார் உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா சண்முகம்.

“கேலப் (Gallup) நிறுவனத்தின் அந்த அனைத்துலகப் பாதுகாப்பு அறிக்கையில், சிங்கப்பூரில் வசிக்கும் 98 விழுக்காட்டினர் இரவில், தனியாக நடந்து செல்லும்போதும் கூட பாதுகாப்பாக உணர்வதாகக் கூறியுள்ளனர். இது அனைத்துலக அளவிலேயே ஆக அதிகமான எண்ணிக்கை,” என்றார் அவர்.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை, சட்ட ஒழுங்குநிலை ஒரு முக்கிய அங்கமாகவும், பொருளியல் செழிப்புக்கு அடித்தளமாகவும் விளங்குவதாக அவர் தெரிவித்தார்.

உள்துறைக் குழுவினருக்கான அமைச்சர் விருதுவழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திரு சண்முகம், 2024ல் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய மூன்று பெரிய போதைப்பொருள் கும்பலை முறியடிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.

எல்லை தாண்டிய போதைப் பொருள் விநியோகச் சங்கிலியை முறியடித்ததுடன் 160 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருளை அகற்றியதையும், தொடர்புடைய 89 பேரைக் கைது செய்ததையும் சுட்டினார்.

இது உள்துறைக் குழுவின் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டியதாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர், சிறைவாசிகளுக்கு முழு ஆதரவளிக்கும் சிங்கப்பூர்ச் சிறைத் துறையின் மறு ஒருங்கிணைப்பு மையம், மோசடிக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கைகள், முன்னெடுப்புகள், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரின் சிறப்பான பணிகள், உள்துறைக் குழுவின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.

நிகழ்ச்சியில் வெற்றியாளர்களுக்கு விருதளிந்துப் பேசிய அவர், “இந்த விழா உள்துறைக் குழுவின் ஒற்றுமை, புத்தாக்க சிந்தனைகளுக்கான உந்துதல், அக்கறை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பிரதிபலிப்பு. நமக்கு முன்னால் சிக்கலான சவால்கள் இருந்தாலும், ஓரணியாகத் திரண்டு சிங்கப்பூரைத் தொடர்ந்து பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.

உள்துறைக் குழுவுக்கான அமைச்சர் விருதுகள்

இவ்வாண்டு உள்துறைக் குழுவினருக்கான அமைச்சர் விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமையன்று (அக்டோபர் 29) உள்துறைக் குழு பயிற்சிக்கழகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நான்கு பிரிவுகளின் கீழ் 130 விருதுகள் வழங்கப்பட்டன.

முக்கிய வழக்குகள், திட்டங்களில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியது, புத்தாக்க சிந்தனையை வெளிப்படுத்தியது எனப் பலவற்றில் சிறந்து விளங்கிய அதிகாரிகள், குழுக்கள், அமைப்புகளை இவ்விருதுகள் அங்கீகரித்தன.

உள்துறை குழுவின் சாதனையாளர் விருது (Home Team Achievement Award) ஐந்து குழுக்களுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த செயல்பாட்டுக்கான விருதினை 107 அணிகள் பெற்றன. இவ்விருதுகளைச் சட்ட அமைச்சர் எட்வின் டோங் வழங்கினார். மூன்று நட்சத்திர சேவை விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், ஒரு பிளாட்டினம், நான்கு தங்கம், 10 வெள்ளி உள்பட உள்துறைக் குழுவுக்கான 15 புத்தாக்க விருதுகளும் வழங்கப்பட்டன. இவ்விருதுகளை உள்துறை மூத்த துணை அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சருமான முகமது ஃபைஷால் இப்ராகிம் வழங்கினார்.

செயற்கை நுண்ணறிவின் துணையுடன் செயல்படும் காணொளியை ஆய்வு செய்யும் ‘சேஃப் எக்ஸ்’ அமைப்பில் பணியாற்றிய பொறியாளர் முகமது அன்வார் ஜலீல் சிறந்த செயல்பாட்டுக்கான விருதினைப் பெற்றார்.

“மேற்பார்வையிடும் அதிகாரிகளுக்குத் துணைபுரியும் இந்தக் கருவியின் முன்னோட்ட அமைப்பில் எங்கள் குழு சில மாதங்களாகப் பணியாற்றியது. பாதுகாப்பின் தொடர்பில் புத்தாக்க சிந்தனைகளை ஊக்குவித்ததும், அதற்காக இவ்விருது கிடைத்துள்ளதும் மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்