அமைச்சர் சான் சுன் சிங்குடன் தாய்லாந்து கடற்படைத் தளபதி சந்திப்பு

அமைச்சர் சான் சுன் சிங்குடன் தாய்லாந்து கடற்படைத் தளபதி சந்திப்பு

படம்: தற்காப்பு அமைச்சு

25 Feb 2026 - 5:32 pm

1 mins read

அரச தாய்லாந்து கடற்படையின் தளபதி பைரோட் ஃபுவாங்சான் சிங்கப்பூர் வந்துள்ளார். அறிமுகப் பயணமாக கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 23) இங்கு வந்த அவர், புதன்கிழமை (பிப்ரவரி 25) காலை தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங்கைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, சிங்கப்பூருக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான அணுக்க, நீண்டகாலத் தற்காப்பு உறவுகளை அவ்விருவரும் மறுஉறுதிப்படுத்தினர்.

அத்துடன், இருநாட்டுக் கடற்படைகளுக்கும் இடையிலான ஆழமான இருதரப்பு ஒத்துழைப்பை அவர்கள் ஊக்கப்படுத்தியதாக சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. திரு சானும் திரு பைரோட்டும் வட்டாரப் பாதுகாப்பு மேம்பாடுகள் தொடர்பான கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாகவும் அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

தொடர்ந்து சிங்கப்பூர் தற்காப்புப் படையின் தலைவர் வைஸ் அட்மிரல் ஆரோன் பெங்கை திரு பைரோட் சந்தித்தார். தற்காப்பு அமைச்சின் மரியாதை அணிவகுப்பைப் பார்வையிட்டார்.

தமது வருகையின் ஒரு பகுதியாக, சாங்கி கடற்படைத் தளத்திற்குச் சென்ற திரு பைரோட், அங்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சீன் வாட்டைச் சந்தித்தார். அப்போது, சிங்கப்பூர்க் குடியரசு கடற்படையின் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து அவரிடம் விளக்கப்பட்டது.

இரு நாடுகளின் கடற்படைகளும் உயர்மட்ட வருகைகளின் வாயிலாக இருதரப்பு உறவுகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், ‘சிங்சியாம்’ என்னும் இருதரப்புப் பயிற்சிகளிலும் இருநாட்டுப் படைகளும் ஈடுபட்டு வருகின்றன.

‘கோப்ரா கோல்டு’ என்னும் அனைத்துலகப் பயிற்சியிலும் இரு நாடுகளும் பங்கேற்கின்றன.

இதுபோன்ற வழக்கமான தொடர்புகள் இரு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன் இருதரப்புப் புரிதல்களை ஆழப்படுத்துவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
கடற்படைதளபதிசான் சுன் சிங்