நிச்சயமற்ற உலகச் சூழலில் சிங்கப்பூர் எவ்வாறு பாதுகாப்புடனும் காலத்திற்கு ஏற்ற வகையிலும் இருக்கலாம் என்ற கேள்விக்கு, புவியியலிலும் வரலாற்றிலும் சிங்கப்பூர் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் உள்ளது என்று தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் பதிலளித்துள்ளார்
25 ஆண்டுகளுக்குமுன் அரசியலுக்காக மருத்துவத் துறையைக் கைவிட்ட டாக்டர் இங், இன்றுவரை நாட்டின் பிரச்சினைகளை ஒரு மருத்துவரின் கண்ணோட்டத்திலிருந்து எடைபோடுகிறார்.
“அடிப்படையில் ஒரு பிரச்சினையை எதிர்கொண்டால் அதன் ஆணிவேர் என்ன என்பதைத்தான் கண்டறியவேண்டும். அறிகுறிகள் என்ன என்பதை ஆராய்வதற்குப் பதிலாகப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணத்தைப் பார்க்கவேண்டும்” என்றார் அவர்.
அண்டை நாடுகள், முக்கிய வல்லரசுகள் போன்றவற்றுக்கு முன் எப்படி தன்னைப் பயனுள்ள நாடாக முன்நிறுத்துவது என்பதுதான் சிங்கப்பூரின் உத்தி என்றார் டாக்டர் இங். அதைத் தற்காப்பு ஒத்துழைப்புகள், கலந்துரையாடல்களை ஏற்றுநடத்துவது, நேர்மையான மதிப்பீடுகளை வழங்குவது போன்றவை மூலம் சாத்தியமாக்க முடிந்தது என்றார் அவர்.
அமெரிக்காவுடனான் நீண்டகால தற்காப்பு உறவுகள், 2018ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு இடையிலான கலந்துரையாடலை ஏற்றுநடத்தியது போன்ற உதாரணங்களைச் சுட்டிய டாக்டர் இங், சிங்கப்பூர் அதன் நம்பகத்தன்மையை இவ்வாறு உருவாக்கிக்கொண்டது என்றார்.
சிங்கப்பூர் ஆயுதப் படையின் முக்கிய மாற்றங்களைக் கண்டவர் டாக்டர் இங். ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான நீண்டகாலத் திட்டங்களை அறிமுகம் செய்தது, சிங்கப்பூர் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுற்றுதல்களைக் கையாள்வதற்கான திறனை வலுப்படுத்தியது ஆகியவை அவற்றுள் அடங்கும்.
2022ஆம் ஆண்டு மின்னிலக்க, புலனாய்வுச் சேவைகளையும் அமைக்க அவர் உதவியதோடு மின்னிலக்கத் தற்காப்பை உள்ளடக்கும் வகையில் முழுமைத் தற்காப்பையும் விரிவுபடுத்தினார்.
டாக்டர் இங் அரசியலில் எந்தத் திட்டமுமின்றிச் சேர்ந்தார். புற்றுநோய் அறுவை சிகிச்சையில் பயிற்சி பெற்ற அவர், இருபது ஆண்டுகள் பொது மருத்துவமனைகளில் சேவையாற்றினார். தனியார் துறையில் நாலாண்டுகள் சேவையாற்றியபோது 2011ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்க டாக்டர் இங்கிற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மருத்துவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தபோது துணைப் பிரதமராக அப்போது இருந்த மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தொலைபேசியில் தம்மை அழைத்து அரசியலில் சேர விருப்பமா என்று கேட்டதை டாக்டர் இங் நினைவுகூர்ந்தார்.
பிரதமர் கோ சோக் டோங்கிடமும் சிங்கப்பூரை நிறுவிய பிரதமர் லீ குவான் யூவிடமும் பேசிய பிறகு அரசியல் களத்தில் டாக்டர் இங் கால் வைத்தார்.
அரசியலில் நுழைந்தால் அர்த்தமுள்ள வகையில் மதிப்பு சேர்க்கவேண்டும், தீர்வாக இருக்கவேண்டுமே தவிர பிரச்சினையாக இருக்கக்கூடாது என்று திரு லீயிடம் சொன்னதாக டாக்டர் இங் பகிர்ந்துகொண்டார்.
எல்லாரையும்போல அரசியல்வாதிகளும் மனிதர்கள்தான் என்ற அவர், ஒவ்வொரு நாளும் வரும் குறைகூறல்களைத் தவிர்க்க முடியாது என்றார்.
“அவற்றோடு வாழ பழகிக்கொள்ளவேண்டும்,” என்ற அவர், அரசியல்வாதிகளைவிட பெரும்பாலும் அவர்கள் குடும்பங்களுக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படுவதாகக் கூறினார்.