உள்ளூர் சொத்துச் சந்தை நிலவரங்களையும் வருமான வளர்ச்சியையும் அரசாங்கம் தொடர்ந்து கவனித்து வரும் என்றும் ‘சரியான நேரத்தில்’ வருமான உச்சவரம்புகளையும் உயர்த்தும் என்றும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ புதன்கிழமை (மார்ச் 5) தெரிவித்துள்ளார்.
தேவைக்கேற்பக் கட்டப்படும் (பிடிஓ) வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், எக்சகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் ஆகியவற்றுக்கான தகுதி வருமான உச்சவரம்பை உயர்த்தும் சாத்தியம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குத் திரு லீ பதிலளித்தார்.
வீவக பிடிஓ வீட்டை வாங்க குடும்பங்கள், திருமணமான தம்பதிகளுக்கான தற்போதைய வருமான உச்சவரம்பு மாத வருவாய் $14,000 (யுஎஸ் $10,480 டாலர்) ஆக உள்ளது.
இது பத்தில் எட்டு சிங்கப்பூர் குடும்பங்களை உள்ளடக்கியது என்று திரு லீ கூறினார். மேலும், புதிய குடியிருப்புகள், வீட்டு மானியங்கள் அதிகம் தேவைப்படுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
தனியார் மேம்பாட்டாளர்களால் கட்டப்பட்டு விற்கப்படும், பொது - தனியார் குடியிருப்புகளின் கலவையான எக்சகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளுக்கு வருமான உச்சவரம்பு மாத வருமானம் $16,000 ஆக உள்ளது.
எக்சகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளின் விநியோகத்தை அரசாங்கம் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1,500 வீடுகளாக அதிகரிக்கும் என்றும் இது முந்தைய ஆண்டுகளில் ஏறக்குறைய 1,200 ஆக இருந்தது என்றும் திரு லீ கூறினார்.
தேசிய வளர்ச்சி அமைச்சுக்கான விவாதத்தின்போது பேசிய திரு லீ, பொது வீடமைப்பைத் தொடர்ந்து கட்டுப்படியாகவும் எளிதில் பெறக்கூடியதாகவும் வைத்திருக்க அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வீடமைப்புச் சவால்கள் இருப்பதாகக் கூறிய திரு லீ, கட்டுமானம், கட்டுமான மூலப்பொருள்கள், ஊழியரணி ஆகியவற்றுக்குக் கிருமித்தொற்று இடையூறாக இருந்தது என்றார். அதனால், தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளுக்கான கட்டுமானங்களில் தாமதம் ஏற்பட்டதையும் அவர் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
அதே நேரத்தில், கிருமித்தொற்றால் தாமதமடைந்த 75,800 வீடுகளின் கட்டுமானங்களை அரசாங்கம் நிறைவு செய்திருப்பதாகத் திரு லீ கூறினார்.