ஐம்புலன்களையும் பயன்படுத்துங்கள்: மாணவர்களுக்கு அமைச்சர் டெஸ்மண்ட் லீ அறிவுரை

ஐம்புலன்களையும் பயன்படுத்துங்கள்: மாணவர்களுக்கு அமைச்சர் டெஸ்மண்ட் லீ அறிவுரை

2 mins read
3a5b884c-9c82-4b5c-b6ff-0d61c9c9db41
மாணவர்கள் இணைந்து உருவாக்கிய ‘சிங்கப்பூர் 2065’ மாதிரியைப் பார்வையிடும் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

கல்வி அமைச்சும் தெம்பனிஸ் மெரிடியன் தொடக்கக் கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்த இவ்வாண்டிற்கான பல்கலைக்கழக புகுமுக வகுப்புக் கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று (ஜூன் 5) நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

56வது முறையாக நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்கள் பல்வேறு கல்விக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் இணைந்து, கலந்துரையாடி சிங்கப்பூரின் எதிர்காலத்திற்குப் பங்களிக்கும் தீர்வுகளை ஆராய்ந்தனர்.

நிறைவு விழாவில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

மாணவர்கள் ஈடுபட்ட திட்டங்களின் கண்காட்சியைப் பார்வையிட்ட அவர் பின்னர் சிறப்புரையாற்றினார்.

“இந்த ஆண்டிற்கான கருத்தரங்கு சிறப்பு வாய்ந்தது. எஸ்ஜி 60 கொண்டாடப்படுவதால் வாய்ப்பு கிடைத்தால் உங்கள் தாத்தா, பாட்டி போன்ற முன்னோடித் தலைமுறையினரிடம் பேசி, கடந்த 60 ஆண்டுகளில் சிங்கப்பூர் என்னென்ன மாற்றங்களைக் கண்டுள்ளது என்று அறிந்துகொள்ளுங்கள். இது, சிங்கப்பூர் முன்னோக்கி செல்வதற்கான தருணமாக உள்ளது. நீங்கள்தான் சிங்கப்பூரை 100 ஆண்டுகளுக்குமேல் இட்டுச் செல்லும் வருங்கால தலைவர்கள்,” என்று மாணவர்களிடம் திரு லீ கூறினார்.

மாறிவரும் உலகச் சூழலில் செயற்கை நுண்ணறிவு, அமெரிக்க வரிவிதிப்பு, பருவநிலை மாற்றம் போன்ற பல சவால்கள் நம்முன் இருந்தாலும், ‘வருமுன் காப்போம்’ என்பதற்கேற்ப முன்னரே திட்டமிட்டு, அதற்கேற்ப செயல்பட்டால் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக இராது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

சமூக சேவைகள் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு லீ, இந்தச் சூழலில் இளையர்கள் தங்களுக்குக் கிட்டும் வாய்ப்புகளைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் அவர் பேசினார்.

“அந்த வழிமுறைகளை ஐம்புலன்களைப்போல எடுத்துக்கொள்ளுங்கள். கண்களால் உங்களைச் சுற்றி நிறைந்திருக்கும் வாய்ப்புகளைப் பாருங்கள். உலகம் உங்களுக்கு அளிக்கும் வாய்ப்புகளைச் சுவைத்துப் பாருங்கள். உலக நடப்புகளை அறிந்துகொள்ள ஆர்வமாக இருங்கள். பிறருடன் நட்புறவு கொள்ளுங்கள். செவிகளால் பிறர் கூறுவதைக் கேளுங்கள். ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டு உங்கள் மனத்தைத் திசைகாட்டியாக வைத்துக்கொள்ள மறவாதீர்கள்,” என்று அறிவுறுத்தினார் திரு லீ.

இக்கருத்தரங்கு மூலம் சமுதாயத்தின்மேல் மட்டும் அக்கறை செலுத்தாமல் ஒருவர்மீது ஒருவர் அக்கறைகொள்ள வேண்டுமென சொன்ன அமைச்சர் லீ, மாணவர்கள் இன்னும் பலவற்றைச் செய்வதற்கான தொடக்கமாகவும் இது இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்