தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசியப் பள்ளி விளையாட்டுகள் 2025 அதிகாரபூர்வத் தொடக்கம்

3 mins read
9fde6394-ca87-4a84-8b85-264222961df4
2025ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளைச் சுடர் ஏற்றித் தொடங்கி வைத்த கல்வி அமைச்‌‌சர் சான் சுன் சிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்த் தொடக்கப்பள்ளிகள் விளையாட்டு மன்றமும் சிங்கப்பூர்ப் பள்ளிகள் விளையாட்டு மன்றமும் இணைந்து நடத்தும் 2025ஆம் ஆண்டுக்கான ‘தேசியப் பள்ளி விளையாட்டுகள்’ போட்டி அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 29 வகை விளையாட்டுகளை உள்ளடக்கிய இந்தப் போட்டிகளை ஜனவரி 22ஆம் தேதியன்று சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் நடைபெற்ற விழாவில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் சுடர் ஏற்றித் தொடங்கி வைத்தார்.

பள்ளிகளுக்கிடையில் நடைபெறும் இந்த தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இவ்வாண்டு 66,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மொத்தம் 250 பிரிவுகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடத்தப்படும் இப்போட்டிகள், ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடக்கும்.

விளையாட்டுகளின் மூலம் மாணவர்களிடையே நற்குணங்களையும் மதிப்புகளையும் விதைக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்தப் போட்டிகள், சிங்கப்பூரில் இளையர்களுக்காக நடத்தப்படும் ஆகப்பெரிய விளையாட்டுப் போட்டிகளாகும். இவற்றில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி உள்ளிட்டவற்றில் பயிலும் மாணவர்கள் பங்கேற்பார்கள். 400க்கும் மேற்பட்ட வெற்றியாளர் பட்டங்கள் வழங்கப்படும்.

“கடந்த 1959ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் இந்த விளையாட்டுப் போட்டிகளின் தொன்மை பெருமைக்குரியது. அத்துடன், இவை எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆற்றல் வாய்ந்தது. குழு மனப்பான்மை, ஒழுக்கம், மீள்திறன் ஆகியவற்றை வளர்க்கும் இந்த விளையாட்டுப் போட்டிகள், இன, பின்புல வேறுபாடின்றி ஒரே இலக்கை நோக்கி ஒத்துழைத்துச் செயல்படும் குணத்தையும் வளர்க்கும் தன்மையையும் கொண்டவை,” என்றார் அமைச்சர் சான்.

பல நன்மதிப்புகளை வெளிக்காட்டிய விளையாட்டு வீரர்களையும் பயிற்சியாளர்களையும் சுட்டிக்காட்டிப் பேசினார் அமைச்சர்.

இந்த விளையாட்டுகள் ஒவ்வொருவரையும் வெற்றியாளராக மட்டுமின்றிப் பிறருக்கு ஊக்கமளிக்கும் வீரராகவும் மாற்றுகிறது என்றும் தெரிவித்தார்.

சுவர்ப்பந்து விளையாட்டு வீராங்கனை அனன்யா சிவக்குமார்.
சுவர்ப்பந்து விளையாட்டு வீராங்கனை அனன்யா சிவக்குமார். - படம்: லாவண்யா வீரராகவன்.

இந்த விளையாட்டுப் போட்டிகளில், நான்காண்டுகளாகப் பங்கேற்று வருபவர் ‘ஸ்குவாஷ்’ எனும் சுவர்ப்பந்து விளையாட்டு வீராங்கனை அனன்யா சிவக்குமார், 16. சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளியில் உயர்நிலை நான்காம் வகுப்பில் பயிலும் இவர், தற்செயலாக இந்த விளையாட்டில் பங்கேற்கத் தொடங்கியதாகக் கூறினார்.

பூப்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த இவர், சுவர்ப்பந்து குறித்துத் தெரிய வந்து, அதில் பயிற்சிகளைத் தொடங்கினார். அது அளவற்ற மகிழ்ச்சியைத் தரவே வாரத்தில் மூன்று நாள்கள் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கினார்.

“இந்த விளையாட்டு எனக்கு உடல் உறுதியை மட்டுமின்றி, தலைமைத்துவப் பண்பு, நேர நிர்வாகம், ஒருங்கிணைந்துச் செயல்படுவதன் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றைக் கற்றுத் தந்துள்ளது,” என்றார். கடந்த ஈராண்டுகளாகத் தனது பள்ளி அணிக்குத் தலைமை ஏற்று வெற்றியை ஈட்டித்தந்த இவர், இவ்வாண்டு 18 பேர் கொண்ட அணிக்குத் தலைமை ஏற்றுள்ளார்.

“இவ்வாண்டின் போட்டிகளில் பங்கேற்க நாங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். சிறப்பாகத் தயாராகி வருகிறோம்,” என்றும் தெரிவித்தார் அனன்யா.

நார்த்புரூக்ஸ் உயர்நிலைப்பள்ளி ஆசிரியரும் பயிற்சியாளருமான சஞ்சய் ராதாகிருஷ்ணன்.
நார்த்புரூக்ஸ் உயர்நிலைப்பள்ளி ஆசிரியரும் பயிற்சியாளருமான சஞ்சய் ராதாகிருஷ்ணன். - படம்: லாவண்யா வீரராகவன்.

விழாவில் அமைச்சர் குறிப்பிட்டுப் பேசிய பயிற்சியாளர்களுள் ஒருவர் சஞ்சய் ராதாகிருஷ்ணன். நார்த்புரூக்ஸ் உயர்நிலைப்பள்ளி ஆசிரியரான இவர் கடந்த பத்தாண்டுகளாக மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறார்.

தனக்குத் தடகளப் போட்டிகள் சிறுவயதிலிருந்தே விருப்பம் என்று சொன்ன இவர், தமது மாணவர்களுக்காக ‘டேர் டு ட்ரீம்’ எனும் குழுவைத் தொடங்கினார். அவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களுடன் புற்றுநோயாளிகளுக்கான தொண்டு நிறுவனத் தொடரோட்டத்தில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

“விளையாட்டு, மாணவர்களின் குணநலன்களை வடிவமைக்கிறது என நம்புகிறேன். ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை, ஒருவர் மீது பரிவு, இரக்கம் காட்டுதல் ஆகியவையும் விளையாட்டு மூலம் மாணவர்களிடம் சென்று சேரும்,” என்றார்.

“இவ்வாண்டு போட்டிகளுக்காக எங்கள் மாணவர்கள் தயாராகி வருகிறார்கள்,” என்று கூறிய ஆசிரியர் சஞ்சய், “வெற்றி என்பது இலக்கல்ல. தன்னால் இயன்றவரை சிறப்பாகச் செயல்பட முடியும் எனும் நம்பிக்கையை இப்போட்டிகள் வளர்க்கும் என எதிர்பார்க்கிறேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்