மாணவர்கள் மின்னிலக்கக் கருவிகள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டாம் என்றும் அதற்கு மாறாக அவற்றை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்த கற்பிக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
16 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று 2024ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா தடை விதித்தது.
இந்நிலையில், மின்னிலக்கக் கருவிகளைச் சிறுவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்காமல் இருப்பது சவால்மிக்கது என்றார் அமைச்சர் சான்.
அதே வேளையில், தடை விதிக்காமல் இருப்பது நடைமுறை வாழ்க்கைக்கு மிகவும் தேவையானது என்றார் அவர்.
இரண்டு வயதுக்கு முன்பு மின்னிலக்கக் கருவிகளைப் பயன்படுத்தினால் அது அறிவாற்றலைப் பாதிக்கும் என்று குழந்தை வளர்ச்சி தொடர்பாக உள்ளூரில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
பெரியவர்களின் கண்காணிப்பு, வழிகாட்டுதல் இல்லாமல் சிறுவர்கள் நாள்தோறும் இரண்டு மணி நேரத்துக்கு மேல் காணொளிகளைப் பார்த்தால் ஏழு வயதை எட்டுவதற்குள் அது அவர்களது அறிவாற்றலைப் பாதிக்கும் என்று ஆய்வு காட்டுவதாகத் திரு சான் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.
பதின்மவயதினரைப் பொறுத்தவரை, காணொளி விளையாட்டுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது, சமூக ஊடகம் மூலம் அவர்கள் பார்ப்பவை, அறிந்துகொள்பவை அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தக்கூடும் என்றும் இடைவிடாது மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடும் பழக்கம் அவர்களுக்கு ஏற்படக்கூடும் என்றும் திரு சான் எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய அபாயங்கள் இருந்தாலும் மாணவர்கள் மின்னிலக்கக் கருவிகள் பயன்படுத்துவதைத் தடை செய்யக்கூடாது என்று அமைச்சர் சான் உறுதியாக நம்புகிறார்.
மின்னிலக்கக் கருவிகளை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்த அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பள்ளிகளில் பாட நேரங்களின்போது கைப்பேசிகளைப் பயன்படுத்த அனுமதி கிடையாது என்று அமைச்சர் சான் கூறினார்.
அதேபோல வீட்டிலும் மாணவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு, மின்னிலக்கக் கருவிகள் பயன்பாட்டைப் பெற்றோர் கட்டுப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குத் தனிப்பட்ட மின்னிலக்கக் கருவிகள் வழங்கப்படாது என்றார் அவர்.
மாறாக, பள்ளிகளில் அவர்கள் மின்னிலக்கக் கருவிகளைப் பகிர்ந்துகொள்வர் என்று திரு சான் கூறினார்.
இணையப் பாதுகாப்பு, இணையத்தை முறையாகப் பயன்படுத்தி நலமுடன் வாழ்வது ஆகியவை குறித்து அனைத்து மாணவர்களுக்கும் கற்றுத் தருவது மிகவும் முக்கியம் என்று அமைச்சர் சான் வலியுறுத்தினார்.
அப்போதுதான் அவர்கள் அக்கருவிகளைப் பொறுப்புடன் பயன்படுத்துவர் என்று அவர் தெரிவித்தார்.
இளவயதிலிருந்தே இப்பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று அமைச்சர் சான் கூறினார்.