கலாசார, சமுதாய, இளையர் துறை அமைச்சரும் மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எட்வின் டோங்கிற்கு இதய ரத்தக் குழாயில் இருந்த அடைப்பை நீக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
53 வயதாகும் அமைச்சர் டோங், செவ்வாய்க்கிழமை தமக்கு ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
வழக்கமான சுகாதாரப் பரிசோதனையின்போது தமது இதய ரத்தக் குழாயில் அடைப்பு இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்ததாக அவர் கூறினார்.
“எனக்கு நீரிழிவு பாதிப்பு இல்லை. நான் புகைபிடிப்பதில்லை. எனது ரத்தக் கொழுப்பின் அளவு சரியாகவே இருந்து வருகிறது. அன்றாட நடவடிக்கைகள், உடற்பயிற்சிகளை சோம்பலின்றி செய்யும் பழக்கம் எனக்குண்டு,” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
“எனவே, ரத்தக் குழாயில் பெரிய அளவில் அடைப்பு இருந்ததை அறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது,” என்று கூறிய அவர், தமக்கு நல்லமுறையில் சிகிச்சை அளித்து, பராமரிக்கும் மருத்துவர்கள், தாதியர் குழுவிற்கு நன்றி தெரிவித்தார்.
தமது கடமைகளை மீண்டும் ஆற்றத் தொடங்கும்வரை வீட்டில் இருந்தே பணியாற்றப்போவதாக திரு டோங் கூறினார்.
அவர் நலம்பெறும்வரை, மரின் பரேட் குழுத்தொகுதியின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு டோங்கின் கடமைகளை ஆற்றுவர் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.