சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங், இந்தியாவின் புதுடெல்லிக்கு சனிக்கிழமை (ஜூலை 25) அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டார்.
அங்கு அவர், சிங்கப்பூர் அனைத்துலக நடுவர் மன்ற நிலையக் கருத்தரங்கில் கலந்துகொண்டு முக்கிய உரை ஆற்றினார்.
அதோடு, இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், இந்தியாவின் சட்ட, நீதித்துறைத் துணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இந்தியாவுக்கான தலைமைச் சட்ட அதிகாரி ஆர். வெங்கடரமணி ஆகியோருடன் புதுடெல்லியில் சிங்கப்பூர் அனைத்துலக நடுவர் மன்ற நிலையத் தொடர்பு அலுவலகத்தையும் அவர் அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.
சர்ச்சைத் தீர்வுகளின் தொடர்பில், சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் இது ஒரு முக்கிய மைல்கல் என்று தெரிவிக்கப்பட்டது.
“இந்தியாவில், சிங்கப்பூர் அனைத்துலக நடுவர் மன்ற நிலையத்தின் மூன்றாவது அலுவலகம் திறக்கப்பட்டிருப்பது, இந்தியாவின் அளப்பரிய ஆற்றல்களில் அந்நிலையம் கொண்டிருக்கும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது,” என்று அமைச்சர் டோங் கூறினார்.
புதிய அலுவலகம், சிங்கப்பூர் அனைத்துலக நடுவர் மன்ற நிலையத்துக்கும் இந்தியச் சட்ட, வர்த்தகச் சமூகத்திற்கும் இடையிலான வளர்ந்துவரும் உறவுக்கான சான்று என்றார் அவர்.
“இந்தியத் தரப்பினருக்கு மேம்பட்ட சேவையை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தொடர்ந்து அனைத்துலக நடுவர் மன்றத்தின் வளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கவும் ஆவலுடன் இருக்கிறோம்,” என்று அமைச்சர் டோங் கூறினார்.
அவர், திரு அர்ஜூன் ராம் மேக்வாலைச் சந்தித்து, சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான சட்டபூர்வ உறவை மறு உறுதிப்படுத்தினார். இருவரும் பரஸ்பர நலன் தொடர்பான அம்சங்களில் கருத்துப் பரிமாறிக்கொண்டனர்.
டெல்லி கருத்தரங்கிற்கு இடையே, அமைச்சர் டோங், இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த்தையும் சந்தித்தார். அதோடு, அவர் இந்தியாவில் தளம் கொண்டுள்ள வழக்கறிஞர்களுடன் வட்டமேசைக் கலந்துரையாடலிலும் கலந்துகொண்டார்.
சிங்கப்பூர்ச் சட்ட அமைச்சின் அதிகாரிகள் அமைச்சர் டோங்குடன் இந்தியா சென்றுள்ளனர்.

