கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் புதிதாகப் பதவியேற்ற பதினான்காம் போப் லியோவை நேரில் சந்தித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (மே 18) இடம்பெற்ற போப் லியாவின் முதல் பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் பின் திரு டோங் போப்பாண்டவரைச் சந்தித்தார்.
இரண்டாம் சட்ட அமைச்சரான திரு டோங், சிங்கப்பூரைப் பிரதிநிதித்து வத்திகன் நகரில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டது.
கத்தோலிக்கத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டதற்காக போப் லியோவுக்கு வாழ்த்துக் கூறிய திரு டோங், சிங்கப்பூருக்கும் போப்பாண்டவருக்கும் இடையிலான உறவு வலுப்பெறும் என்று எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.
“பலதரப்புத்தன்மை, சட்டத்தின் ஆட்சி, தொடர்ந்து வெளிப்படையான கலந்துரையாடல் ஆகியவை குறித்து பகிர்ந்துகொண்டோம்,” என்று திரு டோங் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.
தமது மனைவியுடனும் வெளியுறவு அமைச்சு, கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளுடன் வத்திகன் சென்ற திரு டோங், கடைசியாக அங்கு 2022ஆம் ஆண்டு போப் ஃபிரான்சிசைச் சந்தித்தார்.
மே 18 மாலை ரோமில் உள்ள சிங்கப்பூரர்களைச் சந்தித்த பின் திரு டோங் அடுத்த நாள் சிங்கப்பூருக்குத் திரும்பினார்.
போப்பாண்டவராகத் தேர்வுசெய்யப்பட்ட முதல் அமெரிக்கர் என்ற பெருமையைப் போப் லியோ பெறுகிறார். போப்பாண்டவராக அவர் நடத்திய முதல் பிரார்த்தனைக் கூட்டத்தில் அமெரிக்க துணையதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிகாகோவில் பிறந்த 69 வயது போப் லியோ, பல ஆண்டுகள் பெருவில் இறைத் தொண்டில் ஈடுபட்டிருந்தார். அவர் பெரு குடியுரிமை பெற்றிருப்பதால் தென் அமெரிக்காவைச் சேர்ந்த முதல் போப் என்ற பெருமையையும் பெறுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
ஏப்ரல் 21ஆம் தேதி காலமான போப் ஃபிரான்சிசை அடுத்து புதிய போப் லியோ தேர்வுசெய்யப்பட்டார்.
போப் பிரான்சிஸ் கொந்தளிப்பான காலக்கட்டத்தில் 12 ஆண்டுகளுக்குக் கத்தோலிக்கச் சமூகத்தை வழிநடத்தினார்.