பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தலைமையில் புதிய பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதியில் நால்வர் அணியை மக்கள் செயல் கட்சி (மசெக) களமிறக்குகிறது.
இதனை அக்கட்சி திங்கட்கிழமை (ஏப்ரல் 21) உறுதிப்படுத்தியது.
பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயலாற்றிய மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் இந்தத் தேர்தலில் பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
தமக்கு பதிலாக அமைச்சர் இந்திராணி ராஜா, மசெக அணிக்குத் தலைமை தாங்குவார் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் டானும் திரு ஷாரில் தாஹாவும் மசெக அணியில் இடம்பெற்றுள்ளனர்.
செம்ப்கார்ப் நிறுவனத்தின் சிங்கப்பூர், தென்கிழக்காசிய நிர்வாகப் பிரிவுத் தலைவரான வேலரி லீ நை யீ புதுமுக வேட்பாளராக அவர்களுடன் இணைந்துள்ளார்.
“வருங்காலத்தில் குடியிருப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து, சேவை செய்யும் திறன் இந்த வலுவான குழுவிற்கு இருக்கின்றது என்ற முழு நம்பிக்கையுடன் பாசிர் ரிஸ் தொகுதியிலிருந்து விலகுகிறேன்,” என்றார் மூத்த அமைச்சர் டியோ.
தஞ்சோங் பகார் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 2001ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்துள்ள குமாரி இந்திராணி, இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தான் சேவை செய்த தொகுதியைவிட்டு வெளியேறுவது சற்று வருத்தமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இத்தனை காலம் தஞ்சோங் பகார் குடியிருப்பாளர்களுக்கு சேவையாற்ற முடிந்ததில் பெருமிதமடைவதாகக் கூறிய அமைச்சர், அக்குழுத்தொகுதியில் மசெக வலுவான அணியைக் களமிறக்கும் என உறுதியளித்தார்.
தற்போதைய பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதியானது, பாசிர் ரிஸ் குடியிருப்புப் பகுதியின் பெரும்பகுதியும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் சாங்கி பிரிவும் இணைந்த பகுதியாகும்.
புதிய குழுத்தொகுதியில் சேவையாற்ற தாம் மிகவும் ஆவலாக இருப்பதாகக் கூறிய அமைச்சர் இந்திராணி, பாசிர் ரிஸ் தொகுதியில் மூத்த அமைச்சர் டியோவின் நீண்டகாலப் பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்தார்.
“இங்குள்ள குடியிருப்பாளர்களின் தேவைகளுக்கும் இலக்குகளுக்கும் முதன்மை அளிப்பதை எனது நோக்கமாகக் கொண்டுள்ளேன். மூத்த அமைச்சர் டியோவும் அவரது அணியும் இதுவரை செய்த நற்பணிகளைத் தொடர்ந்து, இவ்வட்டாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைக் கவனமாக ஆராய்வேன்,” என்றும் அவர் கூறினார்.
சிண்டாவின் நிர்வாகக் குழுத் தலைவராகச் செயலாற்றிவரும் குமாரி இந்திராணி, சிங்கப்பூர் இந்தியச் சமூகத்துடன் பல ஆண்டுகள் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
இந்திய சமூகத்திற்காகத் தொடர்ந்து ஆதரவளிக்கும் அதே நேரத்தில், அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் நிலையான வாய்ப்புகளை உருவாக்குவதே தமது பரந்த நோக்கம் என்றார் அவர்.
“வேலை வாய்ப்பின்மை, பொருளியல் பாதுகாப்பு, குடியிருப்பாளர்கள் தங்கள் வட்டாரத்துடன் கொண்டுள்ள இணைப்பு முதலியவை, எல்லாச் சமூகங்களிலும் நான் அடிக்கடி கேள்விப்படும் முக்கியப் பிரச்சினைகளாகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய அளவில் வாழ்க்கைச் செலவின உயர்வைச் சமாளிக்க நிதியமைச்சில் பணியாற்றி வருவதாகக் கூறிய அவர், தொடர்ச்சியாக வட்டார அளவிலும் அதைத் தொடர விரும்புவதாகத் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பிற்குப்பின் பாசிர் ரிஸ்-சாங்கி வட்டாரத்தில் வசிப்போரை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் தனிப்பட்ட கவலைகளையும் ஆசைகளையும் புரிந்துகொள்ளும் பணிகளில் ஈடுபடவுள்ளதாக அமைச்சர் இந்திராணி கூறினார்.
இந்தப் பொதுத்தேர்தலில் புதுமுகமாகக் களமிறங்கும் ‘சிங்டெல்’ நிறுவனத்தின்’ எரிசக்திப் பிரிவின் முன்னாள் இயக்குநரான திருவாட்டி லீ, 39, கடந்த 2023ஆம் ஆண்டில் பொதுச் சேவைப் பதக்கம் பெற்றவர்.
இரண்டு வயது குழந்தைக்குத் தாயான அவர், தாம் இருமுறை கருச்சிதைவை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
“அந்த அனுபவம் என் வாழ்க்கையில் நான் எதிர்பாராத விதத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு குடும்பத்தைத் தொடங்கி, அதைப் பேணிக் காக்கும் பயணத்தில் சவால்களை எதிர்கொள்வோருக்கு ஒரு குரலாக இருக்க உறுதியாகவுள்ளேன்,” என்றார் அவர்.
இத்தனை காலமாகத் தொண்டூழியம் புரிந்ததில், சிறந்த யோசனைகள் சிங்கப்பூர் பொதுமக்களிடமிருந்தே வருவதை உணர்ந்ததாகக் கூறிய திருவாட்டி லீ, அந்த யோசனைகளுக்கு உயிர்கொடுக்க விரும்புவதாகவும் சொன்னார்.
புதிய பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதியில் பல எதிர்க்கட்சிகள் போட்டியிட தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ள வேளையில், சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி அங்குக் களம் காணும் என்று அதன் தலைவர் டெஸ்மண்ட் லிம் உறுதிபடக் கூறியுள்ளார்.
கடந்த தேர்தலில் பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியில் இருந்ததைப்போல், இத்தொகுதியில் மும்முனைப் போட்டி ஏற்படலாம் என்று பரவலாக நம்பப்படுகிறது.
தற்போது பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதியில், பாசிர் ரிஸ்-பொங்கோல் தொகுதியைச் சேர்ந்த 87,768 வாக்காளர்களும் ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியைச் சேர்ந்த 12,871 வாக்காளர்களும் உள்ளனர். மொத்தமாக 100,639 வாக்காளர்களை அப்புதிய குழுத்தொகுதி கொண்டுள்ளது.