உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இருவரும் புளூம்பர்க்கும் பிற ஊடக நிறுவனங்களும் தங்கள் சொத்து பரிவர்த்தனைகள் தொடர்பான அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறி சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சிங்கப்பூரில் உள்ள உயர்தரமான பங்களா பரிவர்த்தனைகள் குறித்த டிசம்பர் 12 புளூம்பர்க் கட்டுரையில், “சிங்கப்பூர் மாளிகை தொடர்பான ஒப்பந்தங்கள் பெருமளவில் ரகசியமாக மறைக்கப்படுகின்றன,” என்ற தலைப்புடன் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ‘தி ஆன்லைன் சிட்டிசன்’, ‘தி எட்ஜ்’ போன்ற ஊடகங்கள் அந்தக் கட்டுரையை எடுத்து தங்கள் ஊடகங்களில் பதிவேற்றம் செய்தன.
டிசம்பர் 16ஆம் தேதி அன்று ஒரே மாதிரியான ஃபேஸ்புக் பதிவுகளில், புளூம்பர்க்கின் கட்டுரை அவதூறானது என்றும், சட்ட ஆலோசனையைப் பெற்ற பிறகு கட்டுரை தொடர்பான கோரிக்கை கடிதங்களை அனுப்புவதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
அந்தச் சொத்து பரிவர்த்தனைகள் குறித்து அவதூறான அறிக்கைகளை வெளியிட்ட மற்றவர்கள் மீதும் அமைச்சர்கள் இதேபோன்ற நடவடிக்கையை எடுப்பார்கள் என்றும் ஃபேஸ்புக் பதிவுகள் கூறுகின்றன.
“இந்தக் குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையானதாகப் பார்க்கிறோம்,” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டபோது, புளூம்பர்க் செய்தித் தொடர்பாளர், இந்த விவகாரத்தில் இப்போது கருத்து கூறுவதற்கில்லை என்று கூறினார்.
ஜனவரி முதல் டிசம்பர் தொடக்கம் வரையிலான மதிப்பின்படி, உறுதி செய்யப்பட்ட உயர்தரமான பங்களா ஒப்பந்தங்கள் பற்றி அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
புளூம்பர்க் நியூஸ் (Bloomberg News) மற்றும் லிட்ஸ் சோத்தபிஸ் இன்டர்நேஷனல் ரியல்டி (List Sotheby’s International Realty) ஆகியவற்றால் தொகுக்கப்பட்ட தரவுகளிலிருந்து இந்தத் தகவல்கள் பெறப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
அந்த கட்டுரையில் இரண்டு அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட சொத்துப் பரிவர்த்தனைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.