அமைச்சர் ஃபைஷால்: நோன்புப் பெருநாள் ஒற்றுமைக்கான திருநாள்

அமைச்சர் ஃபைஷால்: நோன்புப் பெருநாள் ஒற்றுமைக்கான திருநாள்

2 mins read
590d39ce-ff84-4c24-bfca-28bdfcda2de5
முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடனும் மற்ற அன்பர்களுடனும் செல்ஃபி எடுக்கிறார். - படம்: இணைப்பேராசிரியர் ஃபைஷால் இப்ராஹிம்

ஒற்றுமை உணர்வு, இருபக்கப் புரிந்துணர்வு ஆகியவற்றைச் சிங்கப்பூரின் நோன்புப் பெருநாள் பிரதிபலிப்பதாக முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

“நோன்புப் பெருநாள் நம் சமூகத்தில் சிறப்பிடம் வகிக்கிறது. ஒரு மாத நோன்புக்குப் பிறகு ஷவ்வால் (மாதம்), குடும்பங்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் ஆகியோரை ஒருங்கிணைத்துப் பிணைப்புகளை வலுப்படுத்துகிறது,” என்றும் அவர் கூறினார்.

இணைப்பேராசிரியர் ஃபைஷால் வெள்ளிக்கிழமை (மார்ச் 20ல்) வெளியிட்ட பதிவில் இந்த வாசகங்களுடன் காணொளி ஒன்றும் இடம்பெற்றுள்ளது. நோன்புப் பெருநாள் சிங்கப்பூரில் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

சொங்கோக் (Songkok) எனப்படும் பாரம்பரியத் தொப்பி செய்யும் ஒருவரை இணைப்பேராசிரியர் ஃபைஷாலும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் காணச் சென்று, அத்தொப்பியை அணிந்து பார்ப்பதைக் காணொளி சித்திரிக்கிறது.

“தோட்டத்திற்குச் சென்று பூக்களைப் பறித்தேன், அந்தப் பூக்களின் நறுமணம் நன்றாக உள்ளது. ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்தோம், இப்போது ஷவ்வால் மாதத்தில் வெற்றியை ஒன்றாகக் கொண்டாடுகிறோம்,” என அந்தப் பதிவு தொடங்கியது.

“நோன்புப் பெருநாள் நமது சமூகத்திற்குச் சிறப்பு அர்த்தத்தை அளிக்கிறது. ஒரு மாதகால நோன்புக்குப் பிறகு, குடும்பத்தினர், நண்பர்கள், அண்டை வீட்டாருடன் ஒன்றுகூடவும், உறவுகளை வலுப்படுத்தவும், அன்பை வளர்க்கவும் ஷவ்வால் நல்ல தருணமாக வருகிறது.

“நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் நமது பன்முகச் சமூகத்தின் ஒற்றுமை உணர்வைப் பிரதிபலிக்கின்றன. வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களும் அண்டை வீட்டாரும் அதன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு, இந்த நன்னாளை நன்றியுடன் கொண்டாடுகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமது பலமாகும்,” என இணைப்பேராசிரியர் ஃபைஷால் கூறினார்.

இறைவனின் ஆணைப்படி புதிய ஷவ்வால் மாதம் மரியாதையையும் புரிதலையும் மேலும் வலுப்படுத்தட்டும் என்ற வாழ்த்தையும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்