அமைச்சர் ஓங்: நான்கு நோய்கள் கண்காணிக்கப்படுகின்றன

2 mins read
dc6cf1c5-7d9a-45f3-8125-b78adbcce34c
சுகாதார அமைச்சர் ஓங் யி காங். - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

இன்னொரு கிருமித்தொற்று நெருக்கடிநிலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க, சிங்கப்பூர் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக நான்கு நோய்கள் மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் டிசம்பர் 21ஆம் தேதியன்று ஃபேஸ்புக், இன்ஸ்டகிராமில் பதிவிட்டார்.

கொவிட்-19, எச்5என்1, எம்பாக்ஸ் ஆகிய நோய்கள் அவற்றில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள நோயாளிகளில் ஆறு விழுக்காட்டினரின் உயிரைப் பறித்த மர்ம நோய் தொடர்பான விவகாரங்களையும் சுகாதார அதிகாரிகள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அமைச்சர் ஓங் கூறினார்.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் மர்ம நோய் காரணமாக மாண்டோரில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நோயால் 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறைந்தது 37 பேர் மாண்டுவிட்டதாகவும் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இந்த மையத்துக்குக் கண்காணிப்புக் கருவிகளை நன்கொடையாக வழங்க சிங்கப்பூர் முடிவெடுத்துள்ளதாக திரு ஓங் கூறினார்.

ஆப்பிரிக்க சுகாதாரப் பராமரிப்பு அதிகாரிகளுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்க சிங்கப்பூர் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆண்டிறுதியில் மக்களிடையே வெளிநாட்டுப் பயணங்கள் அதிகமாக இருக்கும் என்பதால் அக்காலகட்டத்தில் கிருமித்தொற்று தொடர்பாக சிங்கப்பூர் அதிகக் கவனம் செலுத்துவது வழக்கம் என்றார் அவர்.

பறவைக் காய்ச்சல் என்று அறியப்படும் எச்5என்1 நோய் ஆக அபாயமிக்க கிருமித்தொற்றாக உருவெடுக்கும் சாத்தியம் இருப்பதாக அமைச்சர் ஓங் எச்சரித்தார்.

எச்5என்1 நோய் காரணமாக அமெரிக்காவில் 65 வயது நபர் ஒருவருக்கு மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் இவ்வாரத் தொடக்கத்தில் தெரிவித்தனர்.

அந்நோயால் அமெரிக்காவில் ஒருவருக்கு மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

நோய்வாய்ப்பட்டவர் லுவிசியானா மாநிலத்தில் எச்5என்1 கிருமியால் பாதிக்கப்பட்ட பறவைகளுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

அமெரிக்காவில் இதுவரை 61 பேர் எச்5என்1 கிருமித்தொற்றால் பாதிப்படைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் பறவைகள் அல்லது கால்நடைகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதை அமைச்சர் ஓங் சுட்டினார்.

எனவே, இந்நோய் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் சாத்தியம் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

“மனிதர்களிடையே இந்நோய் பரவியதற்கான ஆதாரம் இருக்கிறதா என்பதை கண்டறிய உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். அவ்வாறு நிகழ்ந்தால், எச்5என்1 கிருமி உருமாறிவிட்டது என்றும் கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது என்றும் தெரிந்துகொள்ளலாம்,” என்று அமைச்சர் ஓங் கூறினார்.

கடுமையான காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் போன்றவை எச்5என்1 நோயின் அறிகுறிகள்.

இந்நிலையில், காங்கோ ஜனநாயகக் குடியரசை உலுக்கியுள்ள மர்ம நோய், சிங்கப்பூரில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு என்று சுகாதார அமைச்சு இம்மாதம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
கிருமித்தொற்றுஆப்பிரிக்காகொவிட்-19