எளிதான அரசியல் ஆதாயங்களுக்காகத் தேர்தல் பிரசாரங்களில் இனம், சமயம் போன்ற அம்சங்களைப் பயன்படுத்துவதற்கான அழிவுகரமான உந்துதலைத் தவிர்க்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14), உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா சண்முகம் மன்றத்தில் ஆற்றிய உரையில் அடையாள அரசியலைத் தவிர்க்கும்படியும் வலியுறுத்தினார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது இடம்பெற்ற சில பிரச்சினைக்குரிய சம்பவங்களின் தொடர்ச்சியாக அவரது உரை அமைந்திருந்தது.
ஒரு மணி நேரம் நீடித்த உரையில் இனம், சமயம் ஆகியவை தொடர்பில் சிங்கப்பூரின் அணுகுமுறை குறித்த அடிப்படைக் கொள்கைகளை அவர் எடுத்துரைத்தார்.
வருங்காலத்தில் இத்தகைய பிரச்சினைகளைத் தூண்டும் சம்பவங்கள் இடம்பெற்றால் இங்குள்ள அரசியல்வாதிகள் எப்படிச் செயலாற்ற வேண்டும் என்பதையும் திரு சண்முகம் விளக்கினார்.
அவரவரின் சமய நம்பிக்கைகளைப் பின்பற்றும் உரிமை மக்களுக்கு இருக்கும்போதும், பொதுவான அரசியல் விவாதங்கள் சமய சார்பற்ற முறையில் நடைபெற வேண்டும், முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றார் அவர்.
சிங்கப்பூர் ஒரு சுதந்திர நாடாக விளங்குவதற்கு இந்த அணுகுமுறை அவசியம் என்று அமைச்சர் கூறினார்.
குறிப்பாக, கடந்த பொதுத் தேர்தல் நேரத்தில் சிங்கப்பூர் சமய போதகர் நூர் டெரோஸ் மற்றும் மலேசியாவின் பாஸ் கட்சி அரசியல்வாதிகளின் கருத்துகளுக்குப் பாட்டாளிக் கட்சி இன்னும் விரைவாகப் பதிலளித்திருக்கலாம்; தன் நிலைப்பாட்டை அது மேலும் தெளிவுபடுத்தியிருக்கலாம் என்றார் அமைச்சர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அடையாள அரசியல், அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் பிரிவினையை ஏற்படுத்தியிருப்பதைத் திரு சண்முகம் சுட்டினார்.
அத்தகைய பிளவைக் கட்டுப்படுத்துவது கடினம் என்றும் அதை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர இயலாது என்றும் நாடாளுமன்றத்தில் அவர் எச்சரித்தார்.
ஒட்டுமொத்தத்தில் அரசியல் கட்சிகள் பெரும்பாலான வாக்காளர்களுக்குச் சாதகமாக நடந்துகொள்ளும் நிலை ஏற்படக்கூடும் என்றும் சிறுபான்மை இனத்தவர் இதனால் பாதிக்கப்படுவர் என்றும் தமது அமைச்சர் நிலை அறிக்கையில் திரு சண்முகம் குறிப்பிட்டார்.
அந்நியத் தரப்புகள் இணையம் வழியாகச் சிங்கப்பூர் வாக்காளர்களைக் கவரும் முயற்சியில் ஈடுபட்டதை அடுத்து அடையாள அரசியல் குறித்துச் சிங்கப்பூர்த் தலைவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
நாட்டின் வெற்றிக்கு முக்கியமான நடைமுறை, அடிப்படைகள் குறித்துச் சிங்கப்பூரர்களுக்கு நினைவுபடுத்தவே இந்த விவகாரம் குறித்துத் தாம் பேசுவதாகத் திரு சண்முகம் சொன்னார்.
“இது மிகவும் தீவிரமான அம்சம். எனவே, புதிய நாடாளுமன்றத் தொடர் தொடங்கப்பட்ட பிறகு கிடைக்கும் முதல் வாய்ப்பில் இது குறித்து அமைச்சர் நிலை அறிக்கை வெளியிடத் தீர்மானித்தேன்,” என்றார் அவர்.
திரு சண்முகத்தின் அமைச்சர்நிலை அறிக்கை குறித்து கருத்துரைத்த மூத்த அமைச்சர் லீ சியன் லூங், “பல்லாண்டுகளாக, இனம், மொழி, சமயம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், ஒரு தேசமாக நாம் முன்னேறி வந்திருக்கிறோம். சிங்கப்பூரர்கள் இதை வலுவாகக் கடைப்பிடிக்கிறார்கள். இதுவே நமது நாட்டு நிர்மாணத்தின் அடிப்படைப் பண்பு.
நமது சமய சார்பற்ற அரசியலின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தி, பன்முகத்தன்மையைத் தழுவி, நல்லிணக்கத்துடன் வாழ்வோம். அரசியலில் இனத்தையும் சமயத்தையும் ஒருபோதும் கலக்கக்கூடாது. அதுதான் வருங்கால சந்ததியினருக்கு ஒரே தேசமாக செழிக்க வழி,” என்று தமது ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.