சிங்கப்பூரின் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகத்தைக் குறிவைத்து பங்களா தொடர்பிலான கட்டுரை எழுத்தப்படவில்லை என்று புளூம்பர்க் செய்தி நிறுவனத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
புளூம்பர்க் வெளியிட்ட பங்களா தொடர்பிலான கட்டுரைக்கு எதிராக உள்துறை அமைச்சருமான திரு சண்முகமும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கும் அவதூறு வழக்குத் தொடுத்திருந்தனர்.
உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 8) நடைபெற்ற வழக்கு விசாரணையில் சிங்கப்பூரில் நடைபெறும் பங்களா பரிவர்த்தனைகள் குறித்து புளூம்பர்க் அடிக்கடி செய்தி வெளியிடுவது வழக்கம் என்று மூத்த வழக்கறிஞர் என். ஸ்ரீநிவாசன் கூறினார்.
சிங்கப்பூரில் பலரும் அத்தகைய செய்திகள் பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றனர் என்றார் அவர்.
அதையடுத்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டில் வெளிவந்த சில முக்கிய பங்களா பரிவர்த்தனைகள் குறித்து வெளிவந்த கட்டுரைகளையும் திரு ஸ்ரீநிவாசன் சுட்டினார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் மகள் டாக்டர் லீ வெய் லிங்கிற்குச் சொந்தமான பங்களா, ஹைடிலோ உணவகங்களை நிறுவிய திரு ஷீ யொங்ஹொங்கிற்கு $50 மில்லியனுக்கு விற்கப்பட்டதையும் திரு ஸ்ரீநிவாசன் குறிப்பிட்டார்.
அவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்வதாகச் சொன்ன திரு சண்முகம் ஒவ்வொரு பரிவர்த்தனையின் பின்னணியையும் புரிந்துகொள்வது அவசியம் என்றார்.

