தூர அடிப்படையிலான கட்டண முறை நடைமுறைபடுத்தப்பட்டால் எதிர்க்காலத்தில் கூடுதல் வாகன உரிமைச் சான்றிதழ்கள் (சிஓஇ) வழங்கப்படலாம் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட் நவம்பர் 12ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து அடுத்த சில ஆண்டுகளுக்கு கூடுதலாக 20,000 சிஓஇ சான்றிதழ்கள் வழங்கப்படும்.
கூடுதலாக வழங்கப்படும் சான்றிதழ்களுக்கும் தூர அடிப்படையிலான கட்டண முறையை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.
“இஆர்பி 2.0 மூலம் தூர அடிப்படையிலான கட்டண முறை சாத்தியம் என்றபோதிலும் அதை நடைமுறைப்படுத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. இது தொடர்பாகக் கூடுதலாக ஆராய வேண்டும். இஆர்பி 2.0லிருந்து பெறப்படும் தரவுகளையும் ஆராய வேண்டும். சாதக நிலையும் பாதகங்களும் உள்ளன. அவை குறித்து மிகக் கவனமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும்,” என்று சிஓஇ சான்றிதழ் அதிகரிப்பு பற்றி கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் சீ விளக்கமளித்தார்.
தூர அடிப்படையிலான கட்டண முறைக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டால் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ள நிலப் போக்குவரத்து ஆணையத்துக்கு மேலும் ஓர் அணுகுமுறை கிட்டும் என்றார் அவர்.
கூடுதல் சிஓஇ சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தபோது கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகு பயணப் போக்குகள் மாறிவிட்டதை அது சுட்டியது.
2019ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வாகனங்களின் மொத்த பயணத் தூரம் கிட்டத்தட்ட ஆறு விழுக்காடு சரிந்தது.
அதுமட்டுமல்லாது, மத்திய வர்த்தக வட்டாரத்தில் போக்குவரத்து குறைந்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், இஆர்பி 2.0 மூலம் மெய்நிகர் நுழைவாயில்கள் போன்ற அம்சங்கள் மூலம் ஆணையத்தால் போக்குவரத்து நெரிசலை செவ்வனே நிர்வகிக்க முடியும் என்று அமைச்சர் சீ கூறினார்.
ஏ, பி, சி பிரிவுகளுக்கான சிஓஇ சான்றிதழ்களின் எண்ணிக்கை ஒவ்வொரு காலாண்டிலும் தொடர்ந்து உயர்த்தப்படும் என்று அவர் கூறினார்.
சிஓஇ சான்றிதழ்களின் எண்ணிக்கை 2026ஆம் ஆண்டு உச்சத்தை எட்டும் என்று அமைச்சர் சீ கூறினார்.

