தனியார் வாடகை கார்களாகப் பயன்படுத்த பிப்ரவரி 19ஆம் தேதிக்கு முன்பு நிறுவனங்கள் வாங்கிய கார்கள், தனியார் கார்களாக தனிநபர்களிடம் விற்கப்படலாம் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
நிறுவனங்கள் அவற்றின் தனியார் வாடகை கார்களைப் பதிவு செய்த மூன்று ஆண்டுகளுக்குள் விற்க முடியாது என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், புதிய கார்கள் அல்லது 2025 பிப்ரவரி 19ஆம் தேதியிலிருந்து புதிதாகப் பதிவு செய்யப்படும் கார்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று திரு சீ கூறினார்.
புதிய விதிமுறையின்படி, இந்த கார்கள் தனியார் வாடகை கார்களாக மட்டுமே தொடர முடியும்.
அவற்றை மற்ற நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கலாம், தனிநபர்களுக்கு விற்பனை செய்ய முடியாது.
“பிப்ரவரி 19க்கும் முன்பு தனியார் வாடகை கார்களாக வாங்கப்பட்ட கார்கள் விற்கப்படலாம் அல்லது குறைந்த விலையில் ஓட்டுநர்களுக்கு வாடகைக்கு விடப்படலாம்,” என்று அமைச்சர் சீ கூறினார்.
தனியார் வாடகைச் சேவைக்காகப் பயன்படுத்தும் கார்களின் எண்ணிக்கையை நிலைப்படுத்த புதிய விதிமுறையை நிலப் போக்குவரத்து ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்தகைய வாகனங்களை வாங்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு வாடகைக்கு விடுவது உறுதி செய்யப்படும் என்று ஆணையம் உறுதி அளித்தது.
தொடர்புடைய செய்திகள்
கார்களை வாங்கி குறுகிய காலகட்டத்திலேயே அவற்றை தனியார் வாடகை கார் சந்தையிலிருந்து நிறுவனங்கள் அகற்றுவதை புதிய விதிமுறை தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.