மக்கள் செயல் கட்சி (மசெக) அமைச்சர்கள் எங்குக் களமிறக்கப்பட்டாலும் திறம்படப் பணியாற்றக்கூடியவர்கள் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் உறுதியளித்துள்ளார்.
வேட்புமனுத் தாக்கல் நாளன்று (ஏப்ரல் 23) துணைப்பிரதமர் கான் கிம் யோங், மனிதவள அமைச்சர் டான் சீ லெங் ஆகியோர் வேறு தொகுதிகளில் எதிர்பாராவிதமாகக் களமிறக்கப்பட்டதையடுத்து, அதன் தொடர்பாக மசெக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அரசியலிலிருந்து ஓய்வுபெறும் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் இருவரின் சேவைக்கு அவர் நன்றி தெரிவித்தார். அவர்கள் விட்டுசெல்லும் பெரிய இடத்தை நிரப்புவதற்காக வேட்பாளர் பட்டியலில் மாற்றங்கள் செய்யவேண்டியிருந்ததாகப் பிரதமர் கூறினார்.
மேலும், இதுபோன்ற மாற்றங்கள் தேர்தலின்போது நடைபெறுவது வழக்கம்தான் என்று குறிப்பிட்ட அவர், பலவற்றைக் கருத்தில்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.
“சில அமைச்சர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்குப் புதியவர்களாக இருந்தாலும், களத்தைப் பற்றி நன்கு அறிந்த மற்ற உறுப்பினர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்,” என்றார் பிரதமர்.
மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்பச் செயல்படவும் தீவு முழுவதும் வலுவான தலைமையை உறுதிசெய்யவும் மாற்றங்கள் அவசியம் என்றார் அவர்.
தற்போதைய நிலையில், தாம் மேற்குப் பகுதியிலுள்ள மார்சிலிங் - இயூ டீ குழுத் தொகுதியிலும், மூத்த அமைச்சர் லீ சியன் லூங் சிங்கப்பூரின் மையத்திலுள்ள அங் மோ கியோ குழுத் தொகுதியிலும், துணைப் பிரதமர் கான் கிம் யோங் கிழக்குப் பகுதியிலுள்ள பொங்கோல் குழுத் தொகுதியிலும் போட்டியிடுவதைச் சுட்டிகாட்டி, மூத்த தலைமைத்துவம் சிறந்த முறையில் பிரிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கூறினார்.
இந்த ஆண்டின் பொதுத் தேர்தலில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் இம்முறை எதிர்க்கட்சிகள் நல்ல தயார்நிலையில் உள்ளதாகவும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத் தொகுதியைப் பற்றிப் பேசுகையில், மசெக அணியை எதிர்த்துப் பாட்டாளி கட்சி போட்டியிடாதது தாமும் எதிர்பார்க்காத ஒன்று எனப் பிரதமர் குறிப்பிட்டார்.
ஒருவேளை எதிர்கட்சியினர் அங்குப் போட்டியிட்டிருந்தாலும், முன்னைய நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங்கின் தலைமையிலான மசெக அணி சிறப்பாகவே செயல்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை என்றார் அவர்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட மசெக தேர்தல் அறிக்கையை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், சிங்கப்பூர் இப்போது முற்றிலும் ‘மாறிவரும் உலகைச்’ சந்திப்பதாகச் சொன்னார்.
கொவிட்-19 தொற்றால் 2020 பொதுத்தேர்தலில் சவாலான சூழ்நிலை ஏற்பட்டிருந்தாலும், இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்கள் அதைவிடக் கடுமையானவை என்று அவர் எச்சரித்தார்.
“அமெரிக்கா விதித்துள்ள வரிகளால் புவிசார் அரசியல் நிலவரங்கள் மோசமாகிவருகின்றன. வர்த்தகத் தடைகள் அதிகரித்துள்ளன. இதன் தாக்கம் இந்த ஆண்டுக்கு அப்பால், நீண்ட காலத்துக்கு நீடிக்கக்கூடும்,” என்றார் பிரதமர்.
உலகின் இந்த நிச்சயமற்ற சூழலில் நாட்டை வழிநடத்த சிறந்த அணியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.
அரசாங்கத்தில் மாறுபட்ட குரல்களை விரும்பும் வாக்காளர்கள், இந்தப் பொதுத்தேர்தல் சிங்கப்பூரின் எதிர்காலத்தை எவ்வாறு தீர்மானிக்கப்போகிறது என்பதை நன்கு சிந்தித்துப் பார்த்து வாக்களிக்கவேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.