மத்திய கிழக்கில் நிலவி வரும் நெருக்கடிநிலையால் ஏற்படும் உலகளாவிய சிக்கல், அவை சிங்கப்பூரில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றை ஆராய உள்நாட்டு நெருக்கடிநிலை குறித்த அமைச்சர்நிலைக் குழு பணியாற்றுவதாக உள்துறை மற்றும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
“போர் முடிவுக்கு வந்தாலும் உலகளாவிய விநியோகத்தில் நிலவும் சிக்கல் எப்போது மாறும் என்று தெரியாது,” என்ற அவர், “எண்ணெய், எரிவாயு விநியோகத்தில் உலகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பொருள்கள் விலையேற்றம் காண்பதுடன், அதன் காரணமாக சிங்கப்பூரிலும் பாதிப்புகள் ஏற்படலாம்,” என்றார்.
“உலகின் பல பகுதிகளில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளன. சிங்கப்பூரில் தற்போதுவரை சிக்கல் ஏதும் இல்லை என்றாலும், நாம் அதிக அளவில் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதால், அதிக விலையேற்றம், போக்குவரத்துக் கட்டண உயர்வு ஆகிய பாதிப்புகள் ஏற்படலாம்,” என்றார்.
மின்சார, எரிவாயுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பிற நாடுகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைச் சிங்கப்பூர் எடுக்கவில்லை என்பதையும் அவர் சுட்டினார். இதற்கான அணுகுமுறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசப்படும் என்றும் அவர் விளக்கினார்.
கையிருப்பை ஆராய்வதுடன், சிக்கலை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும் கணக்கில்கொண்டு உரிய உத்திகளை அக்குழு வகுத்துள்ளதாக அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.
உள்நாட்டு நெருக்கடிநிலை குறித்த அமைச்சர்நிலைக் குழு பணியைத் தொடங்கிவிட்டதாக வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 2) காணொளிவழி பிரதமர் லாரன்ஸ் வோங் பேசியதையடுத்து, சனிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்து அதுகுறித்து விளக்கினார் திரு சண்முகம்.
தாம் தலைமைதாங்கும் இக்குழுவுக்கு துணைப் பிரதமர் கான் கிம் யோங் ஆலோசகராக இருப்பதுடன் பல அமைச்சுகளும், குழுக்களும் இடம்பெறுமென்றார் அமைச்சர். வர்த்தக, தொழில்துறை, நீடித்த நிலைத்தன்மை, தற்காப்பு, வெளியுறவு ஆகிய அமைச்சுகளே அவை.
ஹோர்முஸ் நீரிணை வழியாக விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதால் எரிவாயு மட்டுமின்றி, பிற பொருள்களும் விலையேற்றம் காணலாமென்று கூறிய திரு சண்முகம், இருதரப்பு, பலதரப்பு உறவுகள், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உள்ள சிக்கல்களையும் குழு ஆராயும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
பல அமைச்சுகள், குழுக்களுக்கிடையிலான ஒத்துழைப்பின் அவசியத்தைச் சுட்டிய அவர், “மின்சாரம், எரிபொருள் ஆகிய சிக்கல், தொழில் பாதிப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளைச் சமாளிக்க அரசு தயாராக இருக்க வேண்டும்,” என்றார். விநியோகப் பங்காளிகள் உட்பட பலதரப்பினர் விலையேற்றத்தின் பாதிப்புகளைச் சந்திப்பதாகக் கூறிய அமைச்சர் சண்முகம், இவை அனைத்தையும் சமாளிக்க அரசாங்கம் கைகொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்வகைக் குழுவுக்கான கட்டமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்னரே அமைக்கப்பட்டதையும் நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளதால் அது தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதையும் அவர் சுட்டினார்.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என்றும் கூடுதல் விவரங்கள் அப்போது தெரியவரும் என்றும் திரு சண்முகம் சொன்னார்.

