சில்வியா லிம், ஃபைசால் மனாப் நடத்தை குறித்து இந்திராணி ராஜா அமைச்சர்நிலை அறிக்கை

சில்வியா லிம், ஃபைசால் மனாப் நடத்தை குறித்து இந்திராணி ராஜா அமைச்சர்நிலை அறிக்கை

2 mins read
117f5209-29d4-4eec-aa89-dfd5f6435187
நாடாளுமன்ற அவைத் தலைவர் இந்திராணி ராஜா. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த சில்வியா லிம், ஃபைசால் மனாப் ஆகியோரின் நடத்தை குறித்து நாடாளுமன்ற அவைத் தலைவர் இந்திராணி ராஜா செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 7) நாடாளுமன்றத்தில் அமைச்சர்நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் 2021ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் பொய் உரைத்தது தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் கண்டுபிடிப்புகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் அந்த அறிக்கை அமையவுள்ளது.

இந்த விவகாரத்தில், நாடாளுமன்றக் குழுவிடம் பொய் கூறியதற்காக அக்கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாடாளுமன்ற அமர்வில், சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தைக் குறிவைத்து பதிவிடப்பட்டு, அரசாங்கத்தால் முடக்கப்பட்ட 14 சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் வெளிநாட்டுத் தலையீடுகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

மேலும், ‘டியர் யு’ எனும் திரைப்பட வெளியீடு தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, ‘மாண்டரின் மொழி இயக்கம்’ உள்ளூர் சீன வட்டார வழக்குகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் எய்லின் சோங் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் கேள்வி எழுப்பவுள்ளனர்.

இவற்றுடன், அண்மையில் வெளிச்சத்துக்கு வந்த பல வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாத விவகாரம் எழுந்ததை அடுத்து, இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ள அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் குறித்து இயோ சூ காங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பிலர் யிப் ஹோன் வெங், சுவா சூ காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சூ பெய் லிங் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், சிங்கப்பூரை உலகளாவிய விமானப் போக்குவரத்து, கடல்துறை மற்றும் தளவாடத் துறை நடுவமாக வலுப்படுத்துவது குறித்த அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் முக்கியப் பரிந்துரைகள் ஆகிய அம்சங்களும் இந்த அமர்வில் விவாதத்திற்கு வரவுள்ளன.

இதுகுறித்து மரீன் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டியோ செய் லிங் தலைமையில் மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்றம்நாடாளுமன்ற உறுப்பினர்கள்அறிக்கை