தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இனம், சமயம் பற்றி நாடாளுமன்றத்தில் அமைச்சர்நிலை அறிக்கை: சண்முகம்

2 mins read
96c10273-8e77-45e4-8c61-9d1d88eb2bbb
அக்டோபர் 14ஆம் தேதி கூடவிருக்கும் நாடாளுமன்றத்தில் மன்ற உறுப்பினர்கள் 117 கேள்விகளைப் பதிவுசெய்துள்ளனர். - படம்: சாவ்பாவ்

உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான க. சண்முகம், செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) நாடாளுமன்றம் கூடும்போது, இனம், சமயம் ஆகியவை குறித்த அமைச்சர்நிலை அறிக்கையை வெளியிடவிருக்கிறார்.

இம்மாதம் 9ஆம் தேதி நடைபெற்ற ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாட்டில் திரு சண்முகம் அதுபற்றி விரிவாகப் பேசியிருந்தார். அப்போது இன, சமயப் பந்தங்கள் வெளிநாட்டில் உள்ள சிங்கப்பூரர்களின் நிலையை எவ்வாறு பாதிக்கும் என்பதை அவர் விளக்கினார்.

அக்டோபர் 14ஆம் தேதி கூடவிருக்கும் நாடாளுமன்றத்தில் மன்ற உறுப்பினர்கள் 117 கேள்விகளைப் பதிவுசெய்துள்ளனர்.

மருந்து ஏற்றுமதிமீது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதித்த புதிய வரிகள் சிங்கப்பூரை எப்படி பாதிக்கும் என்று ஏழு கேள்விகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதியாகும் முத்திரையிடப்பட்ட மருந்துகள்மீது 100 விழுக்காட்டு வரி விதிப்பதாகக் கடந்த மாதம் 25ஆம் தேதி திரு டிரம்ப் அறிவித்தார்.

அண்டைவீட்டாரிடையே மூளும் சச்சரவுகள் பற்றியும் அவற்றைத் தீர்ப்பதற்கான தற்போதுள்ள வழிகள் பற்றியும் நான்கு கேள்விகள் பதிவாகின.

கடந்த மாதம் 24ஆம் தேதி பக்கத்து வீடுகளில் வசிப்போரிடையே ஏற்பட்ட சலசலப்பில் ஆடவர் ஒருவர் பெண்ணைக் கொலை செய்ததன் தொடர்பில் அந்தக் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருக்கும் இடையிலான எல்லை தாண்டிய போக்குவரத்துச் சேவைகள், எட்டோமிடேட் போதைப் பொருள் கலந்த கேபோட் ஆகியவை குறித்த கேள்விகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர்.

நாடாளுமன்ற அமர்வின்போது ஐந்து புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும். அவற்றுள் நியாயமான வேலையிட மசோதாவும் அடங்கும்.

அதுகுறித்த கருத்துகளை முன்வைக்கும்படி மனிதவள அமைச்சு பொதுமக்களிடம் ஆகஸ்ட் மாதம் கேட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்