தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
அமைச்சர்கள் ஓங் யி காங், சீ ஹொங் டாட் கலந்துகொண்ட விருந்துகளில் ஃபுஜி குண்டர் கும்பல் உறுப்பினர் சு ஹைஜின் இடம்பெற்றதைக் காட்டும் படங்கள் இணையத்தில் பரவல்

அமைச்சர்கள் இருவருக்கும் $3 பில்லியன் மோசடியில் தொடர்புடையவரைத் தனிப்பட்ட முறையில் தெரியாது: அறிக்கை

2 mins read
4cc03504-993a-4121-8750-c3731ba43519
அமைச்சர்கள் ஓங் யி காங், சீ ஹொங் டாட் கலந்துகொண்ட விருந்து நிகழ்ச்சிகளில் ஃபுஜி குண்டர் கும்பல் உறுப்பினர் சு இடம்பெற்றிருப்பதைக் காட்டும் படங்கள் இணையத்தில் பரவின. - படங்கள்: TOXICSTATENARRATIVEINSG/இன்ஸ்டகிராம்

அமைச்சர்கள் ஓங் யி காங், சீ ஹொங் டாட் இருவருக்கும் பணமோசடிக் குற்றங்களில் தொடர்புடைய சு ஹைஜின் எனும் ஆடவரைத் தனிப்பட்ட முறையில் பழக்கமில்லை என்றும் அந்த ஆடவருடன் அவர்களுக்குத் தொடர்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் இருவரின் ஊடகச் செயலாளர்கள் செவ்வாய்க்கிழமை (மே 6) வெளியிட்ட கூட்டறிக்கை இதனைத் தெரிவிக்கிறது.

அமைச்சர்கள் கலந்துகொண்ட விருந்து நிகழ்ச்சிகளில் ஃபுஜியைச் சேர்ந்த குண்டர் கும்பல் உறுப்பினரான சுவும் இடம்பெற்றிருப்பதைக் காட்டும் படங்கள் இணையத்தில் பரவியதாக அந்தக் கூட்டறிக்கை குறிப்பிட்டது.

முன்னாள் சீர்திருத்தக் கட்சித் (Reform Party) தலைவர் சார்ல்ஸ் இயோ, மே 4, 5ஆம் தேதிகளில் அந்தப் படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டார்.

“அமைச்சர்கள் என்ற முறையில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஒன்றுகூடல்களிலும் அவர்கள் பலதரப்பட்டோரை சந்திக்கின்றனர். நண்பர் ஒருவரின் அழைப்பை ஏற்று அவர்கள் அந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அந்நிகழ்ச்சிக்கு சுவும் வந்திருந்தார்,” என்று கூட்டறிக்கை சொன்னது.

“சில மாதங்களுக்குப் பின்னர் தாம் கலந்துகொண்ட மற்றொரு விருந்து நிகழ்ச்சிக்கும் சு வந்திருந்ததாக அமைச்சர் ஓங் நினைவுகூர்கிறார்,” என்றும் அறிக்கை கூறியது.

அந்த நிகழ்ச்சிகளுக்கு முன்போ அதன் பிறகோ சுவுடன் அமைச்சர்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அமைச்சர்களின் ஊடகச் செயலாளர்கள் குறிப்பிட்டனர்.

மக்கள் செயல் கட்சி அரசாங்கம் நேர்மை தொடர்பில் மிக உயரிய தர நிலையைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர்களின் கூட்டறிக்கை, அமைச்சர்கள் இருவரும் அதைக் கட்டிக்காப்பதில் உறுதியோடு இருப்பதாகவும் கூறியது. தங்கள் பணியில் தற்செயலாக அவர்கள் சந்திக்க நேரிடுவோர் பின்னர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டதாக உறுதிசெய்யப்பட்டாலும் நேர்மையைக் கட்டிக்காக்க அமைச்சர்கள் உறுதியுடன் இருப்பதாகவும் அவ்வாறு கட்டிக்காப்பது தொடர்பில் கேள்விக்கே இடமில்லை என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த சு மீது 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு (2024) ஏப்ரல் 4ஆம் தேதி அவருக்கு 14 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் 2024ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி அவர் கம்போடியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

சிங்கப்பூரின் ஆகப் பெரிய பண மோசடி வழக்காகக் கருதப்படும் $3 பில்லியன் மோசடி தொடரில் குற்றம் சாட்டப்பட்ட பத்துப் பேரில் சுவும் ஒருவர்.

அண்மையில், தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் தலைவரும் முன்னாள் கல்வி அமைச்சருமான இங் சீ மெங், சு கலந்துகொண்ட விருந்து நிகழ்சியில் அமர்ந்திருப்பதைக் காட்டும் படமும் இணையத்தில் பரவி வருகிறது. அதன் தொடர்பில் திரு இங்கைத் தொடர்புகொண்டிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

குறிப்புச் சொற்கள்