பெருகிவரும் இணைய மோசடிகள், பகடிவதை, நுட்பமான இணைய ஊடுருவல் ஆகியவற்றுக்கு இடையே சிங்கப்பூர் தொடர்ந்து பாதுகாப்புடன் இருப்பதற்கு அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றுவர்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைத் தழுவ நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் கூடுதலான ஆதரவு தரப்படும் என்று செப்டம்பர் 19 அன்று வெளியிடப்பட்ட அதிபர் உரைக்கான தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் பிற்சேர்க்கை குறிப்பிடுகிறது.
அதிபர் தர்மன் சண்முகரத்னம், செப்டம்பர் 5 அன்று தமது உரையில் அமைச்சரவையின் நிகழ்ச்சி நிரலை அமைக்கும்போது, செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்வது சுயமாக நடக்கும் ஒன்றல்ல எனக் கூறினார். அந்தத் தொழில்நுட்பம் துடிப்புடன் வளர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எல்லா வர்த்தகங்களும் செயல்திறனைக் கூட்டுவதற்குச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதை எளிதாக்க அரசாங்கம் முற்படுவதாகத் திரு தர்மன் கூறினார். பல்லாண்டுகளாக நீடித்துவரும் முத்தரப்புப் பங்காளித்துவத்தால் சிங்கப்பூர் இதனைத் துரிதமாக மேற்கொள்ள இயலும் என்றும் அவர் கூறினார்.
பொதுச் சேவைப் பிரிவும் அதன் அறிவியல், தொழில்நுட்பக் கொள்கைத் திட்ட அலுவலகம், பிரதமர் அலுவலகத்தின்கீழ் செயல்படும் உத்திபூர்வ குழு, சட்ட அமைச்சு ஆகியவை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) தங்களின் பிற்சேர்க்கைகளை வெளியிட்டன.
மின்னிலக்கக் கருவிகளையும் சேவைகளையும் அணுகுவதற்கு தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் அதிக ஆதரவு வழங்கப்படும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்திருக்கிறார்.
மின்னிலக்க மற்றும் காகித வளங்களின் மூலம் வாசிப்பு மற்றும் கற்றலை ஊக்குவிக்க, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு நூலகங்களையும் காப்பகங்களையும் உருமாற்றத் திட்டமிடுகிறது.
அத்துடன், இளையர்களிடையே ஆரோக்கியமான மின்னிலக்கத் தகவல் பரிமாற்றங்களை ஊக்குவிக்க அமைச்சு, வயதுக்கு ஏற்ற முறையில் அணுகக்கூடிய நடவடிக்கைகளை உருவாக்கும், மற்றும் நேர்மறையான நெறிமுறைகளை ஊக்குவிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
இணையத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான பொருத்தமான கட்டமைப்பைக் கொண்டுள்ள புதிய அமைப்பு ஒன்று தேவைப்படுமா என்பது குறித்து சட்ட அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்தார். சட்ட செயல்முறைகளையும் நீதிமன்ற நடைமுறைகளையும் சிங்கப்பூரர்கள் பயன்படுத்த எளிய முயற்சிகளின் ஒரு பகுதியாக, குடிமையியல் தீர்ப்புகள் செயல்படுத்தும் முறையைச் சட்ட அமைச்சு மேம்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
சர்ச்சைத் தீர்வுத் துறையில் சிங்கப்பூர் கொண்டுள்ள சிறப்பான நிலையைத் தக்கவைக்க, போட்டித்தன்மையை நிலைநிறுத்த, அனைத்துலக நடுவர்களுக்கான சட்டங்கள் மறுஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நீடித்த, பயனுள்ள தீர்வுகள் குடிமக்களுக்கும் வர்த்தகங்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படும் என்று பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் தற்காப்பு அமைச்சருமான சான் சுன் சிங் தெரிவித்தார்.