வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட சிறாரை உள்ளடக்கும் வகையில், கல்வி அமைச்சு தொடக்கப்பள்ளி ஒன்றாம் வகுப்புக்கான பதிவு முறையில் இரண்டு மாற்றங்களைச் செயல்படுத்தவிருக்கிறது. வியாழக்கிழமை (செப்டம்பர் 10) வெளியிட்ட அறிக்கையில் அமைச்சு அதனைத் தெரிவித்தது.
முதலாவதாக, கட்டம் ‘2சி’யில் அனைத்துச் சிறார்க்காகவும் ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை 40லிருந்து 60ஆக உயர்த்தப்படும்.
இது அடுத்த ஆண்டுப் பதிவுப் பயிற்சியிலிருந்து, குறைந்த சேர்க்கை கொண்ட பள்ளிகளைத் தவிர்த்து, மற்ற பள்ளிகள் அனைத்திலும் செயல்படுத்தப்படும்.
இரண்டாவதாக, தேசியச் சராசரியுடன் ஒப்பிடுகையில், பொது வீடமைப்பு விகிதம் கணிசமாகக் குறைவாக உள்ள பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு இருவழித் திட்டம் அறிமுகம் காண்கிறது.
இதில், கட்டம் ‘2சி’ மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் பள்ளியிலிருந்து 2 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வசிப்பவர்களுக்கும், அதற்கு அப்பால் வசிப்பவர்களுக்கும் இரண்டு பிரிவுகளாகச் சமமாகப் பிரிக்கப்படும்.
இரு பிரிவிலும் வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையிலான தொலைவின் அடிப்படையில் முன்னுரிமை இருக்காது. ஒரு பிரிவில் சிங்கப்பூர்க் குடிமக்களின் விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஒதுக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக இருந்தால், குலுக்கல் நடத்தப்படும்.
ஒரு பிரிவில் இடங்கள் மீதமிருந்தால், அவை மற்றொரு பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்படும்.
இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் 40 விழுகாட்டுக்கும் குறைவாகப் பொது வீடமைப்பு வீடுகள் உள்ள 12 பள்ளிகளில் கல்வி அமைச்சு இந்த இருவழித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்.
ஆங்கிலோ சீனப் பள்ளி (ஜூனியர்), ஆங்கிலோ சீனப் பள்ளி (தொடக்கநிலை), சி. எச். ஐ. ஜே. (காத்தோங்) தொடக்கப்பள்ளி, மெதடிஸ்ட் பெண்கள் பள்ளி (தொடக்கநிலை), நன்யாங் தொடக்கப்பள்ளி, நீ ஆன் தொடக்கப்பள்ளி, பெய் ஹுவா பிரஸ்பெட்டெரியன் தொடக்கப்பள்ளி, ராஃபிள்ஸ் பெண்கள் தொடக்கப்பள்ளி, சிங்கப்பூர்ச் சீனப் பெண்கள் தொடக்கப்பள்ளி, செயிண்ட் மார்கரெட்ஸ் தொடக்கப்பள்ளி, தஞ்சோங் காத்தோங் தொடக்கப்பள்ளி, தாவ் நான் பள்ளி ஆகிய தொடக்கநிலைப் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்
பள்ளிகளைச் சுற்றியுள்ள வீடமைப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கில் கொண்டு, கல்வி அமைச்சு இந்தப் பதிவுமுறையை அவ்வப்போது மறுஆய்வு செய்யும்.
இத்தகைய மாற்றங்கள் 2028ல் தொடக்கநிலை 1ல் சேரும் சிறார்க்காக அடுத்த ஆண்டு நடத்தப்படும் தொடக்கநிலை 1 பதிவுப் பயிற்சியில் நடைமுறைப்படுத்தப்படும்.
வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட சிறாரை ஒன்றிணைப்பதில் தொடக்கப்பள்ளிகள் முக்கியமான பங்கு வகிக்கின்றன என்று கல்வி அமைச்சு கூறியது. வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த சக மாணவர்களுடன் பழகவும் கற்றுக்கொள்ளவும் பள்ளிகள் போன்ற இடங்கள் முக்கியமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
பெரும்பாலான தொடக்கப்பள்ளிகளில் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மாணவர்கள் படிக்கின்றனர். இருப்பினும், சில பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், அந்தப் பள்ளிகள் அமைந்துள்ள சுற்றுப்புறங்களின் சமூக-பொருளியல் பின்னணியையே பெரிதும் பிரதிபலிக்கின்றனர் என்பதையும் அமைச்சு உணர்ந்துள்ளது.
தொடக்கநிலை 1 பதிவு முறையில் தற்போது உள்ள வீடு-பள்ளித் தொலைவு முன்னுரிமையே இதற்கு ஒரு காரணம்; இதில் குலுக்கல் முறை தேவைப்படும்போது குடியுரிமைக்கு முதலிடமும், அதனைத் தொடர்ந்து வீடு-பள்ளித் தொலைவுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
பெற்றோர், பள்ளித் தலைவர்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள் உட்பட பலருடன் சேர்ந்து கல்வி அமைச்சு பதிவுமுறை தொடர்பில் கலந்தாலோசித்து இவ்வித மாற்றங்களைச் செயல்படுத்துகிறது.
மாணவர்களின் பல்வேறு திறன்களுக்கும் ஆர்வங்களுக்கும் ஏற்றவாறு சிறந்த ஆசிரியர்கள், வசதிகள், திட்டங்கள் போன்றவை அனைத்துப் பள்ளிகளிலும் இடம்பெறுவதைக் கல்வி அமைச்சு தொடர்ந்து கண்காணித்து அவற்றில் முதலீடு செய்யும் என்று உறுதியளித்துள்ளது. தொடக்கநிலை 1 பதிவு முறை தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

